சிம்மம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 26 டிசம்பர் 2015 (16:10 IST)
எதிலும் புதுமையைப் புகுத்தும் நீங்கள் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு 08.01.முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டத்தில் இந்த ராகுவும், கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:

இதுவரை ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்திருந்துக் கொண்டு வீண் வாக்குவாதங்களையும், பணப்பற்றாக்குறையையும், குடும்பத்தில் பிரச்னைகளையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே நுழைவதால் இனி இடம், பொருள் ஏவலறிந்து பேசும் வித்தையை கற்றுக் கொள்வீர்கள். சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள்.
பிரச்னைகள் வெகுவாக குறையும். மற்றவர்களின் உள்மனதையும் புரிந்துக் கொள்ளத் தொடங்குவீர்கள். குடும்பத்தினருடன் இருந்து வந்த பனிப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணமும் கைக்கு வரும். ஆனால் உங்கள் ஜென்ம ராசியிலேயே ராகு அமர்வதால் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். உடம்பில் இரும்பு மற்றும் கால்சியம் சத்துக் குறைய வாய்ப்பிருக்கிறது.
எனவே பச்சை கீரை, காய், கனிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பாரம்பரிய உணவுகளை உட்கொள்வது கொள்வது நல்லது. செரிமானக் கோளாறு, சிறுநீர் பாதையில் அழற்சி, வயிற்று உப்புசம், வாய்ப்புண் வந்துச் செல்லும். விளம்பரங்களை கண்டு சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தும் ஷாம்பு, சோம்பு, வசனை திரவியங்களை வாங்கி ஏமாற வேண்டாம்.

அலர்ஜி, இன்பெக்ஷன் வரக்கூடும். இரத்தக் கொதிப்பு அதிகமாகும். சாப்பாட்டில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். நேரம் தவறி சாப்பிட வேண்டாம். அல்சர் வர வாய்ப்பிருக்கிறது. மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பான வகையில் யாருக்கும் உதவ வேண்டாம். குடும்பத்திலும் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அடிக்கடி மன அழுத்தங்களும் வரக்கூடும்.
மற்றவர்களை நம்பி புது முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விஷப் பூச்சிகளான பாம்பு, பூரான் கடிக்க வாய்ப்பிருக்கிறது. இ-மெயில் மற்றும் மொபைல் ஃபோனில் வரும் பரிசுத் தொகை அறிவிப்புகளை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். பிள்ளைகள் இன்னும் கொஞ்சம் கடினமாக உழைத்தால் நல்லது என நினைப்பீர்கள். உங்கள் இளமைக் காலத்துடன் அவர்களை ஒப்பட்டுப் பார்த்து கொஞ்சம் பெருமூச்சு விடுவீர்கள். பலவீனம் இல்லாத மனிதர்களே இல்லை என்பதைப் புரிந்துக் கொண்டு நண்பர்கள், உறவினர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதன் சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். அரசியலில் செல்வாக்கு உயரும். பழைய வீட்டை இடித்து கட்டுவீர்கள். என்றாலும் வேனல் கட்டி, உடல் உஷ்ணம் வந்தச் செல்லும். வழக்கால் நெருக்கடிகள் வரும். உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மனஇறுக்கம், வீண் டென்ஷன், அலைச்சல் வந்துப் போகும்.
ராகுபகவான் உங்களின் சேவகாதிபதியும்-ஜீவனாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் வீட்டிற்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு உண்டு. தைரியம் கூடும். புது முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் மதிப்புக் கூடும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வீடு அமையும். என்றாலும் இக்காலக்கட்டங்களில் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வீண் பழி, வதந்திகள், அசதி, காரியத் தாமதம் வந்துச் செல்லும்.
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 வரை ராகுபகவான் செல்வதால் பண விஷயத்தில் கறாராக இருங்கள். மின்சாரம், கத்திரிக் கோள், நக வெட்டியை கவனமாக கையாளுங்கள். முன்பின் அறியாதவர்கள் நயமாகப் பேசுகிறார்கள் என்று நம்பி குடும்ப அந்தரங்க விஷயங்களையோ, தன் சொந்த விஷயங்களையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். இக்காலக்கட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்கள் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது.
மாணவ-மாணவிகளே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். மறதி உண்டாகும். தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமிருந்தால் மட்டும் போதாது, அதற்கான உழைப்பும் இருக்க வேண்டும். உண்மையான நண்பர்களை உணர்ந்துக் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகளில் சற்றே பின்னடைவு ஏற்படும். சிலர் வெளியூர் அல்லது வெளி மாநிலத்தில் விடுதியில் தங்கி படிக்க வேண்டி வரும்.
கன்னிப் பெண்களே! ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாக பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். கல்யாணம் தள்ளிப் போய் முடியும். பெற்றோரின் அறிவுரைக்கு முக்கியத்துவம் தாருங்கள். எல்லாம் எனக்குத் தெரியும் என்று மெத்தனமாக இருக்க வேண்டாம். மாதவிடாய்க் கோளாறு, ஹார்மோன் பிரச்னைகள் வந்துச் செல்லும்.
அரசியல்வாதிகளே! தலைமையைப் பற்றி குறை கூறவேண்டாம். சகாக்களிடம் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். கோஷ்டி பூசலாலும், எதிர்கட்சியினராலும் அலைக்கழிக்கப்படுவீர்கள்.

கலைத்துறையினரே! உங்கள் படைப்பிற்கு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள். உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். கிசுகிசு தொல்லைகளால் டென்ஷனாவீர்கள்.
விவசாயிகளே! அகலக் கால் வைத்து கடன் பிரச்னையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். காட்டு வெள்ளாமை வீட்டிற்கு வரும் வரை எதுவும் நிலையில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

வியாபாரத்தில் ஏற்ற-இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். போட்டிகளை சமாளிக்க கடுமையாக உழைக்க வேண்டி வரும். மற்றவர்களின் பேச்சை கேட்டு முன்பின் அனுபவமில்லாத தொழிலில் முதலீடுகள் போட்டு சிக்கிக் கொள்ள வேண்டாம். கடையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். வேலையாட்களை விரட்டாதீர்கள்.
அண்டை மாநில வேலையாட்களை பணியில் அமர்த்தும் போது சிபாரிசு இல்லாமல் வேலையில் சேர்த்துக் கொள்ளாதீர்கள். அரசாங்கத்தை எதிர்த்துக் கொள்ளாதீர்கள். அக்கம்-பக்கம் கடைக்காரருடன் சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களுடன் சச்சரவுகள் வரும். மர வகைகள், ஊதுபத்தி, உணவு, போடிங், லாட்ஜிங், கமிஷன் லாபமடைவீர்கள். வியாபார விஷயமாக வழக்கு, நீதிமன்றம் என செல்லாமல் முடிந்தவரை பேசி தீர்ப்பது நல்லது.
உத்யோகத்தில் மூத்த அதிகாரிகளை திருப்திபடுத்த முடியாமல் திணறுவீர்கள். சக ஊழியர்களின் ஆதரவால் ஆறுதலடைவீர்கள். ஆனால் எல்லா நேரமும் கறாராக பேசாமல் கொஞ்சம் கலகலப்பாகவும் பேசக் கற்றுக் கொள்ளுங்கள். சிலர் தங்களை அறிவாளியாக காட்டிக் கொள்ள உங்களை மட்டம் தட்டி மேலிடத்தில் சொல்லி வைப்பார்கள் அலுவலகம் சம்பந்தமாக வெளி மாநிலம், அயல்நாடு செல்ல வேண்டி வரும். எதிர்பார்த்த சலுகைகளையும், சம்பள பாக்கியையும் போராடி பெறுவீர்கள்.
கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் அமர்ந்துக் கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும், விரக்தியையும் தந்துக் கொண்டிருந்த கேது இப்போது ராசிக்கு 7-ல் அமர்வதால் இனி விபத்துகள், ஏமாற்றங்களிலிருந்து மீள்வீர்கள். எப்போது பார்த்தாலும் எந்த நேரம் எப்படி பிரச்னை வருமோ என்ற ஒரு புயல் மனதில் வீசிக் கொண்டிருந்தே இனி அமைதியாவீர்கள். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள்.
உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் பார்த்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைப் புரிந்துக் கொள்வீர்கள். ஆனால் களத்திர ஸ்தானமான 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன்-மனைவிக்குள் மனக்கசப்புகள் வரும். வதந்திகளை நம்பாதீர்கள். உங்கள் இருவருக்குள் வீண் சந்தேகத்தை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்க சிலர் முயற்சி செய்வார்கள்.
பழைய கசப்பான சம்பவங்களையெல்லாம் அவ்வப்போது நினைக்கூர்ந்து பேசாதீர்கள். அதன் மூலமாக இருவருக்குள்ளும் பிரச்னைகள் வரக்கூடும். எனவே பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாம்பத்யம் கசக்கும். மனைவி உரிமையுடன் எதையாவது பேசினால் அதை லென்ஸ் வைத்து பார்த்து தப்புக் கண்டு பிடிக்காதீர்கள். மனைவியின் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். முதுகு எலும்புத் தோய்வு, பித்தப் பையில் கல், கர்பப்பையில் நீர் கட்டிகள் வரக்கூடும்.
சின்ன சின்ன அறுவை சிகிச்சைகளும் வந்துப் போகும். அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். வழக்குகளில் வழக்கறிஞரின் போக்கு சரியாக இருக்கிறதா என்பதை அவ்வப்போது நீங்கள் ஆராய்வது நல்லது. கல்யாண முயற்சிகள் தாமதமாகும். வங்கிக் கடனை நினைத்தும் கலங்குவீர்கள்.

வெளியில் தைரியசாலியாக உங்களைக் காட்டிக் கொண்டாலும், உள்மனதில் ஒருவித பயம் பரவும். தன்னம்பிக்கை குறையும். நெருக்கமாக பழகிய ஒருசிலர் கொஞ்சம் ஒதுங்கி செல்வார்கள். பலர் பயன்படுத்திக் கொண்டு கருவேப்பில்லையாக வீசி விட்டார்கள் என்றெல்லாம் அலுத்துக் கொள்வீர்கள்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்- அஷ்டமாதிபதியுமான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் பழமையான புத்தகங்கள், நாவல்கள் மீது நாட்டம் அதிகரிக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.
பூர்வீக சொத்தை விரிவுப்படுத்துவது, அழகுப்படுத்துவது போன்ற முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லைகள் குறையும்.

ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் உங்களிடம் இருக்கும் சில பலவீனங்களை ஒவ்வொன்றாக சரி செய்துக் கொள்ளப்பாருங்கள். எல்லாப் பிரச்னைகளுக்கும் மற்றவர்களை நீங்கள் காரணம் கூறுவது அவ்வளவு நல்லதல்ல.
இலவசமாக சில கூடாப்பழக்க வழக்கங்கள் உங்களைத் தொற்றிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே உங்களுடைய அடிப்படை நடத்தைக் கோலங்களை மாற்றிக் கொள்ளாதீர்கள். ஐம்பது ரூபாயில் முடியக் கூடிய விஷயங்களைக் கூட ஐநூறு ரூபாய் செலவு செய்து முடிக்க வேண்டி வரும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.

உங்கள் சுக-பாக்யாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய கடன் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உடன்பிறந்தவர்களின் கோபம் குறையும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். தாயாரின் உடல் நலம் சீராகும். தாய்வழி சொத்துகளைப் பெறுவதில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.
வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிவீர்கள். வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். புது ஏஜென்சிகளை யோசித்து ஏற்பது நல்லது. கூட்டுத் தொழிலை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. வேறு வழியில்லாமல் கூட்டுத் தொழில் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் முறைப்படி ஒப்பந்தங்களை பதிவு செய்வது நல்லது.

உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் திறமையை சோதிப்பார்கள். வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். சக ஊழியர்கள் செய்யும் தவறுகளை மேலிடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருக்காதீர்கள்.
இந்த ராகு-கேது மாற்றம் அவ்வப்போது சின்ன சின்ன நட்டங்களையும், எதிர்பார்ப்புகளை அடைவதில் தடைகளை ஏற்படுத்தினாலும் தொலைநோக்குச் சிந்தனையாலும், வாக்குச் சாதுர்யத்தாலும் எதையும் சமாளிக்க வைக்கும்.

பரிகாரம்
நாகபட்டினத்திலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையுள்ள கீழையூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅதிரூபவல்லித் தாயார் உடனுறை கீழரங்கன் எனும் ஸ்ரீசேஷசயன பெருமாளை திருவோணம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பார்வையற்றவர்களுக்கு உதவுங்கள்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :