வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கடவுளுக்கு பூஜையின்போது தேங்காய் உடைப்பது எதனை உணர்த்துகிறது தெரியுமா....?

தேங்காய் உடைப்பதே நம் ஆன்மாவை சுற்றியுள்ள மும்மலங்களை போக்குவதற்காக தான். மாயை, கன்மம், ஆணவம், ஆகிய மூன்றும்  மும்மலம் என்று சொல்லப்படுகிறது. தேங்காய் மேல் இருக்கும் மட்டை தான் மாயை மலம் எனப்படுகிறது.
மட்டை எனும் மாயை மலம் நீங்கினால் அடுத்து நார் எனும் கன்ம மலம் வரும். கன்ம மலம் நீக்கப்பட்டால் தேங்காயைச் சுற்றி இருக்கும்  ஓடு தெரியும். இந்த ஓடு ஆணவ மலத்தை குறிக்கும். ஓட்டை உடைத்தால் தேங்காய் இரண்டாக உடைந்து உள்ளே இருக்கும் வெள்ளைப்  பருப்பு தெரியும்.
 
இந்த வெள்ளைப் பருப்பை பேரின்பம் என்பார்கள். ஆக வாழ்வில் மாயை, கன்மம், ஆணவம் என்ற மும்மலங்களையும் விரட்டினால் தான் பேரின்பத்தை பெற முடியும் என்பதை தேங்காய் உடைப்பதன் தாத்பர்யமாக சொல்கிறார்கள்.
 
தேங்காய் உடைப்பதில் இன்னொரு தாத்பர்யமும் உள்ளது. தேங்காய் உள்ளே இருக்கும் இளநீர் உலக ஆசைகளின் அடையாளமாகும். தன்னை  சுற்றி இருக்கும் ஓடு ஒரு போதும் உடையாது. அது என்றென்றும் தனக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று இளநீர் நம்புகிறது.
 
அது போலதான் நாம் இளம் வயதில் நமது உடம்பு அழகானது, உறுதியானது என்று நம்பி பல்வேறு ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். ஆனால் மனம் பக்குவம் பெறும் போது நமது உடம்பு நிலையானது அல்ல என்பது புரியும். அதாவது இளநீர் வற்றும் போது, அது தேங்காயின் பக்குவத்துடன் இரண்டற கலந்து விடும். ஓட்டுக்குள் இருக்கும் நீர் வற்றுவதால், ஒரு போதும் தேங்காய் கெட்டுப் போவதில்லை. மாறாக  உறுதி பெறும். அது போல இளம் வயதில் ஆசைகளுடன் சுற்றித்திரியும் நாம் அனுபவ ஞானம் எனும் பக்குவம் வர, வர உலக ஆசைகளை  துறந்து விடுவதே இதன் தாத்பரியம் ஆகும்.