1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 2 ஜனவரி 2015 (13:24 IST)

சிம்மம் - 2015 ஆங்கில புத்தாண்டு பலன்கள்

பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் மீறாதவர்களே! உங்களுடைய ராசிக்கு 9ஆவது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் ஓரளவு பணவரவு உண்டு. செலவுகள் கட்டுக்கடங்காமல் போனாலும் அதற்கேற்ப வருமானம் இருக்கும். தன்னம்பிக்கை அதிகமாகும். எதிர்ப்புகளும் குறையும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். தந்தையார் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார். தந்தைவழி சொத்துக்கள் கைக்கு வரும். வீடு வாங்குவதற்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்.  உங்களுடைய ராசிக்கு 12-ல் குரு நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் தூக்கம் குறையும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத செலவுகளால் அவ்வப்போது திணறுவீர்கள். 
 
உறவினர், நண்பர்கள் உங்களுடைய நிலைமையைப் புரிந்துக் கொள்ளாமல் உங்களுக்கு அவ்வப்போது அன்புத்தொல்லை தருவார்கள். கண் பார்வையை பரிசோதித்துக் கொள்வது நல்லது. பல் வலி, முதுகு வலி வந்துப் போகும். வாயுப் பதார்த்தங்களையும், கொழுப்புச் சத்துள்ள உணவுகளையும் தவிர்க்கப்பாருங்கள். ஜீலை மாதத்திலிருந்து உங்கள் ராசிக்குள் குரு நுழைவதால் ஆரோக்யம் குறையும். வேலைச்சுமையும் அதிகமாகும். சில நேரங்களில் அலுத்துக் கொள்வீர்கள். வருங்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். சிலரை நினைத்து ஆதங்கப்பட்டுக் கொள்வீர்கள்.  

இந்தாண்டு முழுக்க சனி 4-ம் வீட்டில் தொடர்வதால் கோபம் அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். மற்றவர்கள் உங்களை தரக்குறைவாகப் பேசினாலும் நீங்கள் அதற்கு பதிலடித் தராமல் இருப்பது நல்லது. பழையப் பிரச்னைகளை சிலர் கிளறுவார்கள். 
 
வழக்கால் நிம்மதி குறையும். சில நேரங்களில் சாட்சிக்காரரை விட சண்டைக்காரரே மேல் என்பதை உணருவீர்கள். சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பேசி முடிக்கப்பாருங்கள். ஈகோ பிரச்னையால் நீதிமன்றம் செல்ல வேண்டாம். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி செலவு வைக்கும். அலைப்பேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்காதீர்கள். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். நெருங்கிய உறவினர்களால் இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. 
உங்கள் ராசிநாதன் சூரியன் 5-ம் வீட்டில் நிற்கும் போது இந்தாண்டு பிறப்பதால் பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது. ஆனால் பாவ கிரகங்களின் பார்வை சூரியன் மீது படாததால் பிள்ளைகளுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் வரும். 
 
இந்தப் புத்தாண்டு பிறக்கும் போது சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், பிரிவுகள் வரக்கூடும். வீண் சந்தேகத்தாலும், சிலரின் நட்பாலும் உங்களுக்குள் பிரிவுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் ஒன்று சேர்த்து வெடித்து சிதற வேண்டாம். மனம் விட்டு பேசி உடனுக்குடன் தீர்த்துக் கொள்வது நல்லது. திடீரென்று அறிமுகமாகுபவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பொறுமையாக இருந்து செயல்படுவது நல்லது. ஓட்டுநர் உரிமம், வண்டிக்கு இன்சூரன்சையெல்லாம் புதுப்பிக்க தவறாதீர்கள். 
 
சில நேரங்களில் அபராதத் தொகை கட்ட வேண்டி வரும். மனைவியின் விருப்பமில்லாமல் மனைவிக்கு பிடிக்காதவர்களிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் செவ்வாய் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் வீடு, மனை விற்பது, வாங்குவது நல்ல விதத்தில் முடிவடையும். சொத்து பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். சகோதரங்கள் பக்கபலமாக இருப்பார்கள். இந்தாண்டு முழுக்க ராகு 2-ம் வீட்டில் தொடர்வதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கப்பாருங்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். 
 
சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடிய வாய்ப்பிருக்கிறது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். காலில் அடிப்பட வாய்ப்பிருக்கிறது. கேதுவும் இந்தாண்டு முழுக்க 8-வது வீட்டிலேயே நீடிப்பதால் கனவுத் தொல்லை அதிகமாகும். பணம் வாங்கித் தருவது, திருமண விஷயத்தில் குறுக்கே நிற்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்கள், கொடுக்கல், வாங்கல் விஷயங்களையெல்லாம் வெளியாட்களிடம் சொல்லிக் கொள்ளாதீர்கள். 
 
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். ரசாயனம், மருந்து, ரியல் எஸ்டேட் மூலமாக பணம் வரும். பெரிய அளவில் கடன் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டாம். கூட்டுத் தொழிலையும் தவிர்க்கப்பாருங்கள். இதற்கு முன் கூட்டுத் தொழில் செய்பவர்கள் பங்குதாரர்களை அனுசரித்துப் போவது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளை அரவணைத்துப் போங்கள். சக ஊழியர்களையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது மூத்த அதிகாரிகளை அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகளை கலந்தாலோசிப்பது நல்லது. விரும்பத்தகாத இடமாற்றம் இருக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.
 
மாணவ-மாணவிகளே! உங்கள் கவனத்தை சிதற விடாதீர்கள். படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள். தவறான பழக்க வழக்க முள்ளவர்களின் நட்பை தவிர்ப்பது நல்லது. கணிதம், ஆங்கிலப் பாடங்களில் அதிக அக்கறை காட்டுங்கள். கன்னிப் பெண்களே! கோபத்தை குறையுங்கள். எல்லோரும் நல்லவர்கள் என்று நினைத்து ஏமாறாதீர்கள். உயர்கல்வியில் போராடி வெற்றி பெறுவீர்கள். காதலுக்கும், நட்புக்கும் உள்ள வித்யாசத்தை நீங்கள் உணர்ந்துக் கொள்வது நல்லது. திருமணம் தள்ளிப் போய் முடிவடையும். இந்த 2015ம் ஆண்டு உங்களுக்கு ஆரோக்ய குறைவையும், மனநிம்மதியற்றப் போக்கையும், பணத்தட்டுப்பாட்டையும் தந்தாலும் தெய்வ நம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும், அனுபவ அறிவாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.