வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2017 கண்ணோட்டம்
Written By
Last Updated : வியாழன், 28 டிசம்பர் 2017 (19:15 IST)

2017ல் தமிழகத்தை அதிர வைத்த முக்கிய சம்பவங்கள்.....

2017ம் ஆண்டு போரட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பல்வேறு நிகழ்வுகளை தமிழகம் சந்தித்தது. அவற்றில் சில முக்கிய நிகழ்வுகளை இங்கே பார்ப்போம்.

 

ஜல்லிக்கட்டு போராட்டம்:
.
கடந்த 2016ம் வருடம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என பீட்டா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கியது. ஆனால், 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்க வேண்டும் என சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர் கூட்டம் போராட்டத்தை முன்னெடுத்தது. நாட்கள் செல்ல செல்ல அப்போராட்டம் தமிழகம் முழுவது பரவியது. குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். இளம்பெண்கள் கூட இரவு நேரங்களில் கடற்கரையிலேயே தூங்கி போராட்டத்தை தொடர்ந்தனர்.
 
இப்போராட்டத்தை ஒடுக்க முடியாமல் தமிழக அரசும், காவல் துறையும் கையை பிசைந்து கொண்டு நின்றது. வேறு வழியில்லாமல், அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜல்லிக்கட்டிற்கான அவசர சட்டத்தை சட்டசபையில் இயற்றி, மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கினார். ஆனால், அந்த சட்டத்தை நிரந்தரமாக்க கூறி மாணவர்கள் சென்னை மெரினாவில் போராட்டத்தை தொடர்ந்தனர். எனவே, களத்தில் இறங்கிய போலீசார் குண்டு கட்டாக அவர்களை வெளியேற்றினர். அப்போது, கடற்கரை பகுதியில் கலவரம் ஏற்பட்டு களோபரம் ஆனது. 2 நாட்களுக்கு பின்னே இயல்பு நிலை ஏற்பட்டது.

 
சிறைக்கு சென்ற சசிகலா :
 
ஜெ.வின் மறைவிற்கு பின் அவரது நெருங்கிய தோழி சசிகலா, அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து அவர் அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.  அதன் பின்பே அவரையே தமிழக முதல்வராக்கும் முயற்சியும் நடந்தது. முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்து, தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு சசிகலா வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ஒரு வாரத்திற்கும் மேல் வித்யாசாகர் மௌனம் காக்கவே, எம்.எல்.ஏக்கள் ஓபிஎஸ் பக்கம் சென்று விடுவதை தடுக்க அவர்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். 
 
அந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவே, அவர் சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே, டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராக நியமித்து விட்டு அவர் பெங்களூர் அக்ராஹர சிறைக்கு சென்றார். அவரோடு அவரின் உறவினர் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால், சசிகலாவின் அரசியல் வாழ்க்கை முடிவிற்கு வந்தது.
 
நெடுவாசல் போராட்டம்:
 
தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம்  நெடுவாசலில் பிப்ரவரி 15ம் தேதிக்கு பின் போராட்டம் துவங்கியது.  அதன் பின் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளிலும் போராட்டம் பரவியது. இத்திட்டத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் கொடுத்த வளர்மதி என்ற மாணவி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  
 
மக்கள் போராட்டம் ஒருபக்கம் தொடர்ந்தாலும், இத்திட்டத்திற்கான ஒப்பந்தம் டெல்லியில் பெட்ரோலிய துறை அமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் ஒப்பந்தம் ஜெம் லெபாரட்ரிஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. ஆனாலும், மக்களின் ஆதரவு இல்லாமல் இத்திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என மத்திய அமைச்சர் உறுதியளித்தார்.

 
கதிராமங்கலம் போராட்டம் : 
 
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீத்தேன் எடுப்பதாக புகார் எழுந்தது. மேலும், சில எண்ணெய் குழாய்களில் உடைப்பு ஏறப்ட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதைத் தொடர்ந்து கடந்த மே 19ம் தேதி முதல் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தை நடத்தினர். 
 
200 நாட்களுக்கு மேலும் போராட்டம் தொடர்ந்தது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் அங்கு புதிதாக எந்த எண்ணெய் கிணறுகளையும் அமைக்கக் கூடாது. மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அனைத்து கிணறுகளையும் மூட வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.  ஆனால், ஜூன் மாத துவக்கத்தில் காவல்துறை உதவியுடன் ஓ.என்.ஜி.சி நிறுவனம் அங்கு தனது பணிகளை துவக்கியது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யபப்பட்டனர்.
 
அனிதா தற்கொலை:
 
கடந்த செப்டம்பர் மாதத்தில், அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி அனிதா நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட விவகாரம் இந்த ஆண்டில் மிகப்பெரிய சோக நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அரசு பள்ளியில் படித்த அனிதா பத்தாம் வகுப்பு தேர்வில் 478 மதிப்பெண்களும், பனிரெண்டாம் வகுப்பில் 1176 மதிப்பெண்களும் பெற்றார். சிகிச்சைக்கு பணமில்லாமல் தனது தாயை பறிகொடுத்ததால், மருத்துவராகி கிராமப்புற மக்களுக்கு சேவை செய்வது அவரின் கனவாக இருந்தது. 

 
ஆனால், 2017ம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேரிவின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், அதில் அவரால் தேர்ச்சியடைய முடியவில்லை. இதில் மனமுடைந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் தமிழகமெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் மரணத்திற்கு தமிழக மற்று மத்திய அரசுகளே காரணம் என திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சுமத்தினர். ஆனாலும், நீட் தேர்வு திட்டத்தை மத்திய அரசு அமுலுக்கு கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியது.
 
கந்து வட்டி கொடுமையால் தீக்குளிப்பு:
 
நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட இசக்கி முத்து என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கடந்த அக்டோபர் 23ம் தேதி காலை நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார். அதன் பின், அவர்கள் அனைவரும் திடீரென ஆளுக்கொரு பக்கம் நின்று தீக்குளித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கருவிகள் இல்லாத காரணத்தால் உடனடியாக தீயை அணைக்க முடியவில்லை. இதனையடுத்து பலத்த காயங்களுடன் இசக்கி முத்து - சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  

 
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அனைவரும் உயிரிழந்தனர். கந்துவட்டி கொடுமையால் ஒரு குடும்பமே பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 
 
இந்த விவகாரத்திற்கு பின், கந்து வட்டி தொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஆட்சியர்கள் மற்றும் காவல்துறையினர் புகார் மனுக்களை பெற்றால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 
 
புரட்டிப் போட்ட ஓகி புயல்:
 
2017ம் ஆண்டு டிசம்பர் மாத தொடக்கத்தில், குமரி மாவட்டம் ஓகி புயலால் கடுமையாக சேதமடைந்தது. மீனவ மக்கள் பலர் தங்களின்  வாழ்வாதாரத்தை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து கடும் துயரத்திற்கு ஆளானார்கள். 
 
ஓகி புயலிற்கு முன் கடலிற்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் புயலில் சிக்கி மாயமானார்கள். மத்திய மாநில அரசுகள், நடவடிக்கை எடுத்து காணாமல் போன மீனவர்கள் பலரை மீட்டனர். அரசு நடத்திய கணக்கெடுப்பில் 104 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 220 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு, தமிழக அரசின் சார்பில் நிவாரணத் தொகையாக ரூ. 20 லட்சம் அறிவிக்கப்பட்டது.

 
மேலும், ராகுல்காந்தி மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஓகி புயலால் பாதிப்படைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரையும், கடலில் மாயமான மீனவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினர். அதோடு, நிவாரண தொகையாக ரூ.4,047 கோடி வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
 
2ஜி வழக்கில் கனிமொழி, ராஜா விடுதலை:
 
மன்மோகன்சிங் தலைமையிலான ஆட்சியின்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ரூ.1,76,000 கோடி அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது என கணக்கு தனிக்கை குழு குற்றம் சாட்டியது. இதில் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டது.  

கடந்த 2011 ஆம் ஆண்டு 2ஜி வழக்கு குறித்து டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. சுமார் 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஓ.பி.உசைனி டிசம்பர் மாதம் 21ம் தேதி அறிவித்தார். அதில், 2ஜி வழக்கில் இருந்து கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தவறி விட்டது எனக்கூறிய நீதிபதி ஓ.பி.சைனி, இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக அறிவித்தார்.
 
திமுக அரசியல் பயணத்தில்  கரும்புள்ளியாக இருந்த 2ஜி ஊழல் புகார், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து நீங்கிப்போனது. இந்த தீர்ப்பை தமிழகமெங்கும் உள்ள திமுகவினர் வரவேற்று, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.