ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்

Om Shape
Sasikala|
விநாயகப்பெருமானின் திருவுருவம் ஓம் எனும் ஓங்கார வடிவமானதாகும். விநாயகரின் வாயின் வலதுபுற ஓரம் தொடங்கி, கன்னம், தலை வழியாகச் சுற்றிக் கொண்டு இடதுபுறத்தில் தும்பிக்கையின் வளைந்த நுனிவரை வந்தால் ஓம் எனும் வரி  வடிவத்தைக் காணலாம்.

 
ஓம் எனும் பிரணவ மந்திரம் அகரம், உகரம், மகரம் எனும் மூன்றெழுந்துகளால் ஆனது. "அ" படைத்தல் தொழிலுக்குரிய  பிரம்மாவையும், "உ" காத்தல் தொழிலுக்குரிய திருமாலையும், "ம" அழித்தல் தொழிலுக்குரிய உருத்திரனையும் குறிக்கின்றது. ஓம் எனும் பிரணவ வடிவாய் இருக்கும் பிள்ளையார் மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்குகின்றார் என்பது தெளிவாகும். 
 
எதை எழுதத் தொடங்கினாலும் "உ" என அடையாளம் இட்டு எழுதுவர். "உ" என்பது சிவசக்தியை குறிக்கும் நாதம்,விந்து  ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும். இதனைப் பிள்ளையார் சுழி என்பர். சிவசக்தி இணைந்த நிலையை பிள்ளையாராகக்  கருதுவதாலேயே அவ்வாறு அழைப்பர்.
 
முதல் வழிபாட்டுக்குரியவர் விநாயகப் பெருமான். சிவ பூதகணங்களின் பதி என்பதால் கணபதி எனப் போற்றப்படுவார். கணேசன், ஏகதந்தன், சிந்தாமணி, விநாயகன், டுண்டிராஜன், மயூரேசன், லம்போதரன், கஜானனன், ஹேரம்பன், வக்ர துண்டன், ஜேஷ்டராஜன், நிஜஸ்திதி, ஆசாபூரன், வரதன், விகடராஜன், தரணிதரன், சித்தி புத்தி தி,பிரும்மணஸ்தபதி, மாங்கல்யேசர், சர்வ பூஜ்யர், விக்னராஜன் என்று இருபத்தியொரு திருப்பெயர்கள் உடையவர் பிள்ளையார் என புராணங்கள் கூறுகின்றன.
 
விநாயகரின் பெண் வடிவமே விநாயகியாகும். அதாவது பெண் உருவப் பிள்ளையார். மதுரை,சுசீந்திரம்,திருச்செந்தூர் கோயில்,  திருவண்ணாமலை அம்மன் ஆலயத் தூணிலும், ஏனைய ஒரு சில இடங்களிலும் தமிழ்நாட்டில் இப்பிள்ளையாரைக் காணலாம். எனினும் வடநாட்டில் ஏராளமான பெண் பிள்ளையார் சிலைகள் காணப்படுகின்றன. சித்தி, புத்தி என மனைவியர் இருவர்  பிள்ளையாருக்கு உண்டு என வடநாட்டில் கருதுவர்.


இதில் மேலும் படிக்கவும் :