1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 19 மே 2024 (12:17 IST)

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

Red Alert
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வரும் நிலையில், பாதுகாப்பு கருதி பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்ல வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் வெப்ப அலை வீசியதால் பகல் நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
 
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.  நீர்ப்பிடிப்பு பகுதிகள் வேகமாக நிரம்பி வருகிறது. 
 
ஒரு சில இடங்களில் ரெட் அலர்ட்டும்,  ஆரஞ்சு அலர்ட்டும் வானிலை மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பாக அந்தந்த ஊர் பகுதி மக்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
Ooty Train
ஊட்டி மலை ரயில் ரத்து:
 
நீலகிரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா பணிகள் வருவதை தவிர்க்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். அதிக மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால்  ஊட்டி மலை ரயில் சேவை இரண்டு நாட்களுக்கு
ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
Kutralam
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு:
 
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கனமழை பெய்து வருகிறது.  இதனால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, ஐந்தருவி, ஆகிய அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
 
Kumbakarai Falls
கும்பக்கரை, மேகமலை தடை:
 
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு இருக்கும் பெரும்பாலான அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  கும்பக்கரை அருவியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல சின்னசுருளி அருவி, மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
 
Kodaikanal
பாறை விழுந்து விபத்து:
 
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதன் காரணமாக சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை முழுவதுமாக சுற்றி பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் பாறைகள் ஒரு சில இடங்களில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் சுற்றுலா பயணிகள் அடுத்த இரண்டு தினங்களுக்கு கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு மாநில பேரிடர் துறை அறிவுறுத்தி உள்ளது.
 
Saduragiri
சதுரகிரிக்கு செல்ல தடை:
 
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில், அய்யனார் கோவில், செண்பகத்தோப்பு, தாணிப்பாறை, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில், பிளவக்கல் அணை, கோவிலாறு அணை, காட்டழகர் கோயில் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் இறங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.