வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 12 ஜனவரி 2019 (11:09 IST)

விராலி மலை ஜல்லிக்கட்டு – கின்னஸ் சாதனையா ?

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி  நடைபெற உள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை  கின்னஸ் சாதனையில் இடம் பெறச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் ஆகியப் பண்டிகைகளின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொன்று தொட்டு வரும் பழக்கம். ஆனால் இடையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகள் துன்புறுத்துவதாக பீட்டா போன்ற அமைப்புகள் வைத்த குற்றச்சாட்டால் நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. அதற்கு எதிராக மக்கள் தமிழகம்  முழுவதும் போராடி தடையை நீக்கி அரசை புதிய சட்டமியற்ற வைத்தனர்.

இதையடுத்துக் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வழக்கமாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் என்றாலே மதுரைதான் என்ற நிலை மாறி தற்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

அதனையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியைக் கின்னஸ் சாதனையில் இடம்பெற செய்யும் முயற்சியில் நிர்வாகக்குழு ஈடுபட்டுள்ளது. இங்கு நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 2,000 காளைகள் பங்கேற்க உள்ளன. இந்த காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும், மேலும் ஜல்லிக்கட்டைப் பார்வையிட ஒரு லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட வருவார்கள் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மற்ற ஊர்களில் நடக்கும் போட்டிகளை விட அதிகளவில் காளைகள் மற்றும் பார்வையாளர்கள் கலந்துகொள்ள இருப்பதால் இந்த போட்டியைக் கின்னஸ் சாதனையில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சியில் விராலிமலை ஜல்லிக்கட்டு நிர்வாகக் குழு ஈடுபட்டுள்ளது.

இந்த பிரம்மாண்டமான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வாடிவாசல் அமைத்தல் மற்றும் பார்வையாளர்களுக்கான திடல் அமைத்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.