1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (09:42 IST)

எடப்பாடி அரசு தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல - வேல்முருகன் விளாசல்

முதல்வர் எடப்படி பழனிச்சாமி அரசு தொடர்வது நாட்டுக்கு நல்லதல்ல என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நாட்டுக்கும் அரசியல் சட்டத்துக்கும் நெஞ்சறிய நேர்மையுடன் நடந்துகொள்வேன்” என்பதுதான் அமைச்சர்கள், ஆளுநர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மற்றும் குடியரசுத்தலைவர் எடுத்துக்கொள்ளும் பதவியேற்பு உறுதிமொழியின் சாரம். அந்த உறுதிமொழிக்கேற்ப அதாவது, சட்டப்படியாக அவர்கள் நடந்துகொள்ளாதபட்சத்தில், அது நாட்டுக்கு நல்லதல்ல. 'ஜெயலலிதாவின் உடல்நிலைகுறித்து பொய்களைத்தான் அறிவித்தோம்' என்ற திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் வாக்குமூலம், இந்நாள் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள், சட்டப்படி நடக்காதவர்கள் என்பதன் சாட்சி. 
 
ஜெயலலிதாவின் மரணச்செய்தி அறிவிக்கப்பட்டது வரை, அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சையில் இருந்தார். அப்போது, அவரது உடல்நிலைகுறித்து தாங்கள் அறிவித்தவை அனைத்துமே 'பொய்' என்கிறார், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். இத்தனை நாட்களாக இந்த 'உண்மை' யைச் சொல்லாத இவர், ஜெயலலிதா இறந்து ஏறத்தாழ ஓராண்டு ஆகும் தறுவாயில் 'ஒப்புதல் வாக்குமூலம்' அளிப்பதன்மூலம் என்ன சொல்லவருகிறார்? 


 

 
அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என அனைவருமே, 'ஜெயலலிதா மரணம்குறித்து விசாரணை நடத்த வேண்டும்; ஆனால் அந்த விசாரணையை தமிழக அரசோ, தமிழக அரசு ஏற்பாடுசெய்யும் விசாரணை அமைப்போ நடத்தக்கூடாது; தமிழக அரசுக்கு அப்பாற்பட்ட ஒரு அமைப்புதான் விசாரணை நடத்த வேண்டும்' என்றுதான் சொல்லி வந்தனர். முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வமும் தனது புரட்சித் தலைவி அம்மா அ.தி.மு.க-வை, அம்மா அ.தி.மு.க-வுடன் இணைப்பதற்கு 'ஜெயலலிதாவின் மரணம்குறித்து சி.பி.ஐ விசாரணை வேண்டும்'  என்றே நிபந்தனை விதித்தார்.
 
ஆனால், சி.பி.ஐ விசாரணைக்கு ஏற்பாடுசெய்யாமல், 'ஓய்வுபெற்ற நீதிபதியைக்கொண்டு விசாரணை நடத்தப்படும்' என்று வெறும் அறிவிப்பையே முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட, மறுபேச்சு பேசாமல் தன் கட்சியை சசிகலா கட்சியோடு இணைத்துக் கொண்டார் பன்னீர்செல்வம். இப்போது அம்மா அ.தி.மு.க துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரனின் கை ஓங்கிவிட, அவர் சார்பு 18 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவை விலக்கிக்கொண்டதால், பழனிசாமி அரசு பெரும்பான்மை இழந்துவிட, ஆட்சி போய்விடும், ஆதாயமும் போய்விடும் என்ற அச்சத்தில் தினகரன் மற்றும் சசிகலா தலைமைமீது பழியைப் போட்டு, இழப்பைச் சரிக்கட்டிவிடலாம் என்ற நப்பாசையிலேயே இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்திருக்கிறார் சீனிவாசன். ஆனால் தினகரன் தரப்பினர், 'சி.பி.ஐ விசாரணை வையுங்கள்; உண்மை அதில் வெளிவரட்டும்' என்கின்றனர். பழனிசாமி அண்கோவிடமிருந்து இதற்குப் பதில் இல்லை என்பதுதான் உண்மை.
 


 
நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை வருமான வரித்துறை சோதனை போட்டது. ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2.63 லட்சம் வாக்காளர்களில் 2.24 லட்சம் வாக்காளர்களுக்கு வாக்குக்குப் பணம் அளித்தது தொடர்பான ஆவணம் சிக்கியது. அதில், 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்தவர்களின் பெயர்கள் இருந்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் சி.சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், செல்லூர் கே.ராஜு, எம்.சி.சம்பத், வி.எம்.ராஜலட்சுமி, வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி மற்றும் ராஜ்ய சபா எம்.பி ஆர்.வைத்திலிங்கம் பெயர்கள் இருந்தன. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், தலைமைச் செயலாளரும் காவல்துறை தலைமை இயக்குநரும் சட்டப்படியான தங்கள் கடமையைச் சரியாகச் செய்யவில்லை. அவர்கள், தங்கள் கடமையை சரிவரச் செய்திருந்தால், மேற்கண்ட அமைச்சர்கள் 11 பேரும் இந்நேரம் பதவியில் இருக்க மாட்டார்கள். ஆக, சட்டத்துக்குப் புறம்பாகவே காரியங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
 
ஜெயலலிதா எதிர்த்துவந்த மோடியின் மக்கள் விரோதத் திட்டங்களை நிறைவேற்றுவதால், பழனிசாமி அரசின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கெல்லாம் நடுவண் அரசும் துணைபோகிறது. எனவே, சட்டப்படி நடந்துகொள்ளாத இத்தகைய மாநில, மத்திய அரசுகள் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல' என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.