1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 மே 2021 (11:51 IST)

ஏழு தமிழர்களை விடுதலை செய்க - வைகோ ஸ்டாலினுக்கு வேண்டுகோள் !

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கூட்டணி கட்சி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 
இது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர். அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது.
 
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யாமல் உள்ளது. இந்நிலையில், ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. 
 
எனவே தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்போடு வேண்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.