செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 7 நவம்பர் 2019 (10:33 IST)

திருச்சியில் குழந்தை விற்பனை: கையும் களவுமாக பிடிபட்ட ஏஜெண்ட்!

திருச்சியில் ஆண் குழந்தையை சட்ட விரோதமாக விற்க முயன்ற பெண் இடைத்தரகரை மருத்துவமனையில் வைத்து போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அருகே முத்துடையான்பட்டியை சேர்ந்த தம்பதிகளுக்கு ஆன் குழந்தை பிறந்துள்ளது. மிகவும் ஏழ்மையில் உள்ள அந்த தம்பதியினருக்கு இது மூன்றாவது குழந்தை. மேலும் அவர்களுக்கு எச்.ஐ.வி தொற்றும் உள்ளதாக தெரிய வந்துள்ளது. வறுமை, நோய் ஆகிய காரணங்களால் ஏற்கனவே அந்த தம்பதியினர் தங்கள் இரண்டு குழந்தைகளை வளர்க்க பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையை விற்றுவிடலாம் என முடிவு செய்துள்ளனர். அதற்கு இடைத்தரகராக அந்தோணியம்மாள் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். ஊத்துக்குளியை சேர்ந்த தம்பதிகளுக்கு குழந்தையை விற்க ஏற்பாடு செய்த அந்தோணியம்மாள் குழந்தைக்கு 1.15 லட்சம் ரூபாய் பணம் வாங்கி தருவதாக குழந்தையின் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

பேச்சுவார்த்தை இருபக்கமும் சுமூகமாக முடித்த அந்தோணியம்மாள் குழந்தையை பெற்றுக்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு சென்றபோது போலீஸில் சிக்கினார். விசாரணையில் மேற்கூறிய சம்பவங்கள் தெரிய வந்துள்ளன. அதன்பேரில் போலீஸார் அந்தோணியம்மாளை குழந்தை கடத்தல் வழக்கில் சிறையிலடைத்தனர்.