கோயம்பேட்டில் வண்டி பார்க் செய்தவர்களுக்கு கட்டணம் இல்லை! – மாநகராட்சி அறிவிப்பு!
கொரோனா பாதிப்பால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு சென்ற பலர் கோயம்பேட்டில் வாகனங்களை பார்க் செய்த நிலையில் அதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், முன்னரே சிறப்பு பேருந்துகள் மூலம் சென்னையில் உள்ள பலர் சொந்த ஊர்களை சென்றடைந்தனர். பேருந்து ஏற வந்தவர்கள் பலர் தங்களது வாகனங்களை கோயம்பேட்டில் உள்ள வாகன பாதுகாப்பகங்களில் பார்க் செய்துவிட்டு சென்றுள்ளனர்.
கிட்டத்தட்ட 55 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளதால் சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்ப வந்து வாகனங்களை எடுக்க முடியாத சூழல் உள்ளது. இந்நிலையில் வாகனம் நிறுத்தப்பட்ட நாளிலிருந்து அனைத்து நாட்களுக்கு கட்டணம் கணக்கிட்டு வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதை தொடர்ந்து வாகன காப்பக ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி ஊருக்கு சென்றவர்கள் திரும்ப வந்து வாகனங்களை எடுக்கும்போது அவர்களிடம் மொத்த நாட்களுக்குமான தொகை வசூல் செய்யக்கூடாது என கூறப்பட்டுள்ளது. ஊர்டங்கிற்கு முன்னரே அவர்கள் வண்டிகளை நிறுத்தி சென்றதும், ஊரடங்கு முடியாததால் அவர்கள் திரும்ப வர முடியாததையும் கருத்தில் கொண்டு ஒரு நாளைக்கான வாகன கட்டணம் மட்டுமே அவர்களிடம் பெறப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதன்படி நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 40 ரூபாயும், சைக்கிளுக்கு 15 ரூபாயும் வசூல் செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.