செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 24 ஜனவரி 2020 (12:13 IST)

99 பேருக்கு தேர்வு எழுத ஆயுட்கால தடை! – டிஎன்பிஎஸ்சி அதிரடி உத்தரவு!

டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வில் மோசடி செய்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆயுள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்துள்ளது டிஎன்பிஎஸ்சி

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த நவம்பர் மாதம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வை நடத்தியது. அதன் மதிப்பெண் பட்டியல் வெளியான நிலையில் முதல் 100 இடங்களுக்குள் தகுதி பெற்றோர் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்களாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தொடுத்த விசாரணையில் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. தேர்வர்களை முறைகேடான வழியில் தேர்ச்சி பெற வைக்க இடைத்தரகர்கள் பணம் பெற்றதுடன் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களை தேர்வு செய்ய சொல்லியுள்ளனர். விடைகளை குறித்த சில மணி நேரத்தில் அழிந்து விடும் விசேஷ பேனாவை கொண்டு விடைகளை குறித்துள்ளனர். அந்த மையங்களில் பணியில் இருந்த நபர்களுடன் இணைந்து இடைத்தரகர்களும் பிறகு சரியான பதிலை குறித்து மற்ற தாள்களுடன் இணைத்துள்ளனர்.

இந்த மோசடி சம்பவத்தை கண்டுபிடித்துள்ள தேர்வு ஆணையம் 99 தேர்வர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாய் கூறியுள்ளனர். மேலும் அந்த 99 பேரும் இனி ஆயுளுக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. அதில் முதல் 100 இடங்களுக்குள் வந்த 39 பேருக்கு பதிலாக நேர்மையாக தேர்வு எழுதிய 39 பேர் தேர்வு செய்யப்பட்டு விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதாக தேர்வாணையம் கூறியுள்ளது. மேலும் மோசடி செய்த 99 பேர், அவர்களுக்கு உதவிய இடைத்தரகர்கள், தேர்வு மைய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.