1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 ஏப்ரல் 2018 (07:51 IST)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் துவங்கியது

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக வாரியத்தை அமைக்கவும் இன்று தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கானது வரும் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பாக ஆங்காங்கே சாலை மறியல், ரெயில் மறியல் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. 
 
கடந்த 1 ஆம் தேதி நடைபெற்ற, திமுக வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 5 ஆம் தேதி யான இன்று அனைத்து எதிர் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவாதாக தெரிவித்தனர். அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வணிகர் சங்க அமைப்புகள்  முழு அடைப்பில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களின் அத்தியாவசப் பொருட்களான பால், காய்கறிகளை வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமிழக - கர்நாடக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.