வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (16:07 IST)

இப்படி ஒரு தேர்தலை பார்த்ததில்லை..! சொதப்பிய தேர்தல் ஆணையம்.! ஜெயக்குமார் விமர்சனம்..!!!

jayakumar
மக்களவை தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது  தேர்தல் ஆணையத்தின் தோல்வியாகத்தான்  பார்க்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
 
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்த முறை சொதப்பிவிட்டது என்றார். ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையத்தின் ஒரு தோல்வியாகத்தான் இதை பார்க்க வேண்டும் என்றும் ஒவ்வொரு தேர்தலின்போது நூறு சதவீத வாக்குப்பதிவை நிறைவேற்றும் வகையில் வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதுதான் அனைவருடைய எதிர்பார்ப்பு என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
 
அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுதான் தேர்தல் ஆணையத்தின் முக்கிய கடமை என குறிப்பிட்ட அவர், பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும் சென்னையில் வாக்களிக்காமல் திரும்பியவர்கள் எத்தனை பேர்? வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர்? இந்த இரண்டு கேள்விகளுக்கும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் பதிலளிக்க வேண்டிய கடமை இந்திய மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உண்டு என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.
 
இந்த முறை நடந்தது போன்று எந்த காலத்திலும் ஏற்பட்டது இல்லை என்று அவர் கூறினார். ஒட்டுமொத்தமாக தேர்தல் ஆணையம் சொதப்பிவிட்டது என்றும் வாக்குப்பதிவு முடிந்த பிறகு வெளியிடப்பட்ட வாக்கு சதவீதத்துக்கும், பின்னர் அறிவிக்கப்பட்ட சதவீதத்துக்கு வித்தியாசம் இருக்கும்போது தேர்தல் ஆணையம் செயல்பட்டதா இல்லையா என்றொரு கேள்வி எழுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

 
எனவே, அது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஜெயக்குமார் வலியுறுத்தி உள்ளார்.