தீபாவளி அன்று எவ்வளவு மழை? –தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
வானிலை ஆய்வு மையத்தின் தகவலை விட தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் மழைக் குறித்து எழுதிவரும் பிரதீப் ஜானின் தகவல்களையே பொதுமக்கள் பெரிதும் நம்புகின்றனர்.
தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கி மாநிலம் முழுவது பரவலாக மழைப் பெய்து வருகிறது. இன்னும் 4 நாட்களில் தீபாவளிப் பண்டிகை வர இருப்பதால் தீபாவளி அன்று மழை பெய்யுமா? எனப் பொதுமக்களும் குழந்தைகளும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.
இதுகுறித்து தற்போது தனது முகநூல் பக்கத்தில் வடகிழக்குப் பருவமழை குறித்து பதிவிட்டுள்ளார். அதில் ‘மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருக்கும் தாழ்வுப்பகுதி கீழாக கன்னியாகுமரி கடற்பகுதியை நோக்கி மெல்ல நகர்ந்து வருகிறது. இதனால், டெல்டா பகுதிகளில் வெப்பச் சலனத்தால் மழை பெய்யும். அதன்பின் மழை மெல்ல நகர்ந்து, தென் மாவட்டங்களை நோக்கி நகரும். இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தின் பல பகுதிகளில் இரவில் கனமழைப் பெய்யும். பகலில் மேகமூட்டமாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தீபாவளி பண்டிகை அன்று பெய்யும் மழை குறித்து கூறும்போது ‘அமெரிக்கா மற்றும் இந்திய வானிலை மாதிரிகள் இரண்டுமே மழை குறித்த வலுவான தகவல்களை அளிப்பவை. அடுத்த 2 அல்லது 3 நாட்களில் மழை குறித்த தெளிவான பார்வை கிடைத்துவிடும். ஆதலால், தீபாவளிப் பண்டிகையன்று தமிழகத்தில் பெரிய அளவுக்கு மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.