லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது அதிர்ச்சியில் இறந்த அதிகாரி
தீபாவளி மாமூல் என்ற பெயரில் தமிழகத்தின் பல பகுதிகளில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்கி கொண்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல்கள் வந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை செய்து வருகின்றனர். இந்த சோதனையில் இதுவரை கோடிக்கணக்கில் கணக்கில் வராத ரொக்கம் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
குறிப்பாக தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, நெல்லை, திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கணக்கில் வராத பணத்தையும், ஆவணங்களையும் அதிக அளவில் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவையில் உள்ள மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தபோது, மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு என்பவருக்குக் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால் அவர் மாரடைப்பு போல் நடிப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கருதியதால் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்ட பாபு மரணம் அடைந்தார். மரணம் அடைந்த பாபுவிடம் இருந்து 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கூறியுள்ளனர்.