வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (10:01 IST)

உயர்ஜாதியினருக்கு 8 லட்சம் என்ன 20 லட்சம் வந்தாலும் ஏழைகள்தான் – தமிழிசை சர்ச்சையான கருத்து !

10 சதவீத இடஒதுக்கீட்டில் முன்னேறிய வகுப்பினரின் வருமான வரம்பு பற்றி சர்ச்சையானக் கருத்தினை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரத்தில் நலிவுற்ற முன்னேறியப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு திட்டத்தை பாஜக அரசு மிக வேகமாக நிறைவேற்றி வருகிறது. இதற்காக தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது. இதில் 16 கட்சிகள் எதிர்ப்பும் 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டில் ஆண்டுக்கு 8 லட்சம் வருமானம் உள்ளவர்களை ஏழை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளொன்றுக்கு 32 ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களே வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டுக்கு 8 லட்சம் அதாவது மாதம் 66,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களை இந்த மசோதாவில் ஏழைகள் என சொல்லியிருப்பது அநியாயமானது எனவும் இது ஏழைகளுக்கு செய்யும் அநீதி எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டிவிட்டரில் ‘உயர் ஜாதியினருக்கு இருக்கும் பிரச்சனைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் 8 லட்சம் என்ன 20 லட்சம் வந்தால் கூட அவர்கள் ஏழைதான்’ எனத் தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களைப் பெற்று வருகிறது.