வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 ஜூலை 2019 (21:09 IST)

10% இட ஒதுக்கீடு: அனைத்து கட்சி கூட்டத்தில் 21 கட்சிகளின் நிலை என்ன?

பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தொடர்பாக சென்னையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 21 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 21 கட்சிகளில் பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு விஷயத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பும். 5 கட்சிகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. திமுக, மதிமுக, மநீம, நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள் உள்பட மொத்தம் 16 கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டை கடுமையாக எதிர்த்தன.
 
அதேபோல் அதிமுக, பாஜக, காங்கிரஸ், புதிய தமிழகம் உள்பட 6 கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டை ஆதரித்தன. 10 % இட ஒதுக்கீடு குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இடையே வாக்குவாதம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 10% இடஒதுக்கீடு அளிப்பதற்கு நாம் தமிழர் எதிர்ப்பும் , புதிய தமிழகம் ஆதரவும் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது
 
பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு வேறு வகையில் உதவி செய்யலாம் என்றும் 10% இடஒதுக்கீடு கூடாது என்றும் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்தார். பொருளாதாரத்தில் நலிவுற்றோருக்கு 10 % இடஒதுக்கீடு என்பது  சமூக நீதிக்கு எதிரானது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
 
69% இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படாமல் 10% இடஒதுக்கீடு வழங்குவதை தமிழக காங்கிரஸ் ஆதரிக்கிறது என தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்தார். தமிழகத்தில் அமலில் உள்ள 69% இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பில்லாமல், பொருளாதாரத்தில் நலிவுற்ற பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டினை செயல்படுத்தலாம் என மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்தது