Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெயலலிதா மரணத்தை கொச்சைப்படுத்தி விமர்சிக்கும் எஸ்.வி.சேகர்: கொந்தளிக்கும் அதிமுக!

Last Updated: புதன், 31 ஜனவரி 2018 (17:28 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை ரசிப்பது போலவும், அவரது மறைவை கொண்டாடுவது போலவும் உள்ள தொனியில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த எஸ்.வி.சேகரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது விஜயேந்திரர் அமர்ந்திருந்தது குறித்து கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதில் அளித்த, எஸ்.வி.சேகர், தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது சட்டம். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டும் என்பது சட்டத்தால் கட்டாயமில்லை என்பதால் விஜயேந்திரர் செயல் தவறில்லை. குருநிந்தனை என்பது பாவத்திற்கு பரிகாரம் உண்டு, சாபத்திற்கு பரிகாரம் கிடையாது என்றார்.
 
இதனையடுத்து கடந்த 2004-ஆம் ஆண்டு ஜெயேந்திரரை ஜெயலலிதா கைது செய்தார். ஆனால் ஜெயேந்திரரை குருவாக மதிக்கும் நீங்கள் 2006-ஆம் ஆண்டு சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனீர்களே என கேள்வி எழுப்பப்பட்டது.
 
அதற்கு எஸ்.வி.சேகர் மழுப்பலாக பதில் அளித்தார். இதனை தொடர்ந்து, குருவை யார் நிந்திக்கிறார்கள் என்பதை பொறுத்துதான், எதிர்வினையும் இருக்குமா? ஜெயலலிதா நிந்தித்ததாக நீங்கள் நினைத்தால் அதற்கான எதிர்வினை இல்லையே? என கேள்வி எழுப்பப்பட்டது.
 
இதற்கு பதில் அளித்த எஸ்.வி.சேகர், ஏன் எதிர்வினை இல்லை. 2006-இல் ஆட்சியே போச்சே. அதுதான் எதிர்வினை. ராணி மாதிரி இருந்த ஜெயலலிதா மரணம், இன்றுவரை சர்ச்சையாகியுள்ளது. பிராமண சமுதாயத்தில் பிறந்தவர்களை அடக்கம் செய்யும்போது எரியூட்ட வேண்டும். ஆனால் ஒரு டப்பாவில் போட்டு உள்ள போட்டுள்ளார்கள். இதைத்தான் சொன்னேன், பாவத்திற்கு பரிகாரம் உண்டு, சாபத்திற்கு பரிகாரம் கிடையாது என்று.
 
எஸ்.வி.சேகரின் இந்த கருத்து அதிமுகவினரை கோபமடைய வைத்துள்ளது. இந்த பேட்டியின் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நிலவும் சர்ச்சைகளை எஸ்.வி.சேகர் வரவேற்கிறார். அவரது மரணத்தையும் எஸ்.வி.சேகர் கொண்டாடுகிறார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனையடுத்து அதிமுகவினர் சமூக வலைதளங்களில் எஸ்.வி.சேகருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :