புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : சனி, 7 அக்டோபர் 2017 (09:27 IST)

ஆளுநர் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு அவமதிப்பு!

ஆளுநர் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு அவமதிப்பு!

நேற்று நடைபெற்ற ஆளுநர் பதவியேற்பு விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாமல் அவமதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


 
 
தமிழகத்தின் 20-வது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த பதவியேற்பு விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முக்கிய பிரபலங்கள் பலர் வருகை புரிந்தனர்.
 
ஆளுநர் பதவியேற்பு முடிந்ததும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க முதல்வர், துணை முதல்வர், மூத்த அமைச்சர்களுக்கு பின் எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கப்பட வேண்டும். ஆனால் அவரை அழைக்காமல் விஐபிக்களை அழைத்துக் கொண்டிருந்தனர்.
 
இது தொடர்பாக தனது அதிருப்தியை ஸ்டாலின் ஆளுநரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் தெரிவித்தார். அதன் பின்னர் அவர்களது அறிவிப்புக்கு காத்திருக்காமல் ஸ்டாலின் நேரடியாக மேடையேறி ஆளுநருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துக் கூறினார்.
 
அதன் பின்னர் ஏற்பாடு செய்திருந்த தேநீர் விருந்தில் பங்கேற்காமல் ஸ்டாலின் புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆளுநர் பதவி ஏற்றறதும் முதலமைச்சர், அமைச்சர்கள் வாழ்த்து சொன்னார்கள். அதன் பின்னர் மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து சொல்ல வேண்டும்.
 
ஆனால் வாழ்த்து சொல்ல சென்ற என்னை ஓர் அதிகாரி என்னைத் தடுத்து நீதிபதிகள் வாழ்த்து சொன்ன பிறகு நீங்கள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்றார். அப்படிப் பார்த்தால் அமைச்சர்களும் நீதிபதிகள் வாழ்த்துச் சொன்ன பிறகே வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும் அதுதான் மரபாக இருக்கும். ஆனால் அமைச்சர்கள் வாழ்த்து சொன்ன பிறகு என்னை ஏன் தடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.