”நீட் தேர்வு ரத்து மசோதா நிறைவேற்ற வேண்டும்”.. தமிழக அரசை வலியுறுத்தும் ஸ்டாலின்
நீட் தேர்வை ரத்து செய்யும் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ படிப்பின் நுழைவு தேர்வான நீட் தேர்வு, கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை சிதைக்கிறது என தமிழகத்தில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் ஒருங்கிணைப்பாளர் தொல்.திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நீட் தேர்வை எதிர்த்து பேசியும் வருகின்றனர்.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஆட்சியை காப்பாற்ற நீட் தேர்வை மாணவர்கள் மீது திணித்து, பல தற்கொலைகளுக்கு அதிமுக அரசு வித்திட்டுள்ளது. கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதில், மத்திய மாநில அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழக அரசு சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடரை கூட்டி, நீட் தேர்வை உடனே ரத்து செய்வதற்கான மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் எனவும் முக ஸ்டாலின் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக நீட் தேர்வை மத்திய அரசு ஏன் திரும்ப பெற கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், இது குறித்து எடப்பாடி அரசு ஏன் மௌனம் காக்கிறது? என தனது அறிக்கையில் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.