செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (10:49 IST)

ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்; 4,150 பேருந்துகள் தயார்! – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

தமிழகத்தில் ஆயுதபூஜை, விஜயதசமிக்காக மக்கள் பயணிக்க சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இந்து மத பண்டிகையான ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி எதிர்வரும் அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதற்காக மக்கள் பலரும் தொழில் நகரங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் முக்கிய நகரங்களில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் சிவசங்கர் “ஆயுதபூஜையை முன்னிட்டு, வருகிற 30-ந்தேதி, அக்டோபர் 1-ந்தேதிகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,100 பஸ்களுடன், 2 ஆயிரத்து 50 சிறப்பு பஸ்களையும், பிற ஊர்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு ஆயிரத்து 650 சிறப்பு பஸ்களையும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.


மேலும் திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் தாம்பரம் மேப்ஸ் பஸ் நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருத்தணி, ஓசூர், திருப்பதி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பணிமனை அருகிலிருந்து இயக்கப்படும். மேலே குறிப்பிட்ட ஊர்களை தவிர மற்ற ஊர்களுக்கான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.