ஸ்நாப் டீல்(SNAP DEAL) நிறுவனத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம்!
கோவை டாடாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வைத்தியநாதன். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு, ஸ்நாப் டீல்(SNAP DEAL) என்ற இணையதள விற்பனையகம் மூலமாக ஒன்பதாயிரத்து நானூறு ரூபாய் செலுத்தி செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.
அவர் வாங்கிய செல்போன் சில நாட்களிலேயே பழுதாகியதால் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அந்நிறுவனத்தின் சேவை மையத்தில் செல்போனை பழுது பார்க்க கொடுத்துள்ளார். பழுது பார்க்கப்பட்ட செல்போனை உபயோகித்தபோது மீண்டும் அது பழுதாகியது. எனவே பெங்களூரில் உள்ள ஸ்னாப் டீல்(SNAPDEAL) தலைமை அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். அவர்கள் மீண்டும் செல்போனை பழுது நீக்கி கொடுத்துள்ளனர். அதன் பின்னரும் செல்போன் பழுதாகியதால் வைத்தியநாதன் கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சளுக்கு நிவாரணம் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்னாப் டீல் நிறுவனம், வைத்தியநாதனுக்கு ஒன்பதாயிரத்து நானூறு ரூபாயை திருப்பிச் செலுத்த வேண்டுமென்றும் அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் மற்றும் வழக்குக்கான செலவு ரூ. 2,500 சேர்த்து வழங்க வேண்டும் என்று நீதிபதி செங்கோட்டையன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.