கலர் பஞ்சுமிட்டாய் விற்றால் கடுமையான தண்டனை.. அபராதம்..! – உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் கலர் பஞ்சு மிட்டாய் விற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி விற்றால் சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் குழந்தைகள் விரும்பி வாங்கும் இனிப்பு பதார்த்தமாக உள்ள பஞ்சு மிட்டாயில் நிறமேற்ற பயன்படுத்தும் கெமிக்கலில் புற்றுநோய் ஏற்படுத்தும் ஆபத்தான வேதிப்பொருட்கள் இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. முதலில் புதுச்சேரியிலும், பிறகு சென்னையிலும் பஞ்சு மிட்டாய்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைக்கு பின் தமிழகம் முழுவதும் பிங்க் நிறத்திலான கலர் பஞ்சு மிட்டாயை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் பலரும் கலர் சேர்க்காத வெள்ளை பஞ்சு மிட்டாயை விற்க தொடங்கியுள்ளனர். எனினும் சில பகுதிகளில் கலர் பஞ்சு மிட்டாயை சிலர் விற்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் குமார் பேசியபோது “உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிங்க் நிற பஞ்சுமிட்டாய் சென்னையில் எங்கும் விற்கப்படவில்லை. நிறம் சேர்க்காத வெள்ளை பஞ்சு மிட்டாய்களே விற்கப்பட்டு வருகின்றன.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பிங்க் பஞ்சு மிட்டாய் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கலர் பஞ்சு மிட்டாய்களை தெருக்களில் விற்பவர்கள் அதை எங்கிருந்து வாங்கி வருகின்றனர் என்று கண்டறிய முயற்சித்து வருவதாகவும், சிலர் மறைமுகமாக வீடுகளிலேயே பஞ்சு மிட்டாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K