புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (16:03 IST)

துணைத்தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டு - சீமான் வலியுறுத்தல்!

துணைத்தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த வேண்டும் என சீமான் வலியுறுத்தல். 

 
சென்னை, தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளை ஆதித்தொல் குடிகளுக்கும், மொத்தமாக 11 மாநகராட்சிகளைப் பெண்களுக்குமென ஒதுக்கி அரசாணை வெளியிட்டிருக்கும் தமிழக அரசின் அறிவிப்பை முழுமையாக வரவேற்கிறேன். 
 
சமூகத்தின் விளிம்பு நிலையிலிருக்கும் உழைக்கும் மக்களான ஆதித்தொல்குடிகளுக்கும், காலங்காலமாக சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படாது வஞ்சிக்கப்பட்ட பெண்களுக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய உள்ளாட்சியில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக்கும் தமிழக அரசின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டுகிறேன்.
 
சென்னை எனும் பெருநிலத்தைத் தனது அளப்பெரிய உழைப்பின் மூலம் உருவாக்கி நிர்மாணித்த, இந்நிலத்தின் பூர்வக்குடிகளான ஆதித்தமிழ் மக்களுக்கு சென்னையை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென ஏற்கனவே நாம் தமிழர் கட்சி கோரியிருந்த நிலையில், அத்தார்மீகமானக் கோரிக்கைக்கு திமுக அரசு செயல்வடிவம் கொடுத்திருக்கும் நற்செய்தியறிந்து பெரிதும் மகிழ்ந்தேன். மதிப்புமிகுந்த இச்செயல்பாட்டுக்கு எனது உளப்பூர்வமான நன்றியையும், நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இதனைப்போலவே, மறைமுகமாகத் தேர்வுசெய்யப்படும் ஏறக்குறைய 14,000 துணைத்தலைவர் பதவிகளுக்கும் இடஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த வேண்டுமெனவும், மாநகராட்சி, நகராட்சி ஆகியவற்றின் தலைவர்களை மக்களே நேரடியாகத் தேர்வுசெய்யும் வகையிலான வாய்ப்பு முறையை மீண்டும் ஏற்படுத்தி சனநாயகத்தை நிலைநாட்ட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசைக் கோருகிறேன்.