காங்கிரஸ், பாஜக தனித்து நின்றால் காணாமல் போய்விடும்! – சீமான்

seeman
Prasanth Karthick| Last Modified திங்கள், 14 அக்டோபர் 2019 (19:14 IST)
ராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சுக்கு கே.எஸ் அழகிரி கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலளித்து பேசியிருக்கிறார் சீமான்.

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெற இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற சீமான், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது சரிதான் என்ற ரீதியில் பேசியுள்ளார்.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனங்களை தெரிவித்துள்ளனர். சீமான் வீடு மற்றும் கட்சி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சீமானின் இந்த சர்ச்சை பேச்சை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கண்டித்துள்ளதோடு, காங்கிரஸ் தமிழர்களுக்காக நிறைய நன்மைகள் செய்துள்ளதாகவும் கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய சீமான் “இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்தவை குறித்து கே.எஸ் அழகிரியுடன் நேரில் விவாதிக்க தயார். ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் மக்களுக்காக என்ன செய்தது. காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு அணை பிரச்சினை போன்றவற்றில் காங்கிரஸ் என்ன நிலைபாட்டில் இருந்தது?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் “காங்கிரஸ் 110 வருடமாக மக்களுக்கு சேவை செய்து வருகிறதெனில் தனித்து நின்று போட்டியிடலாமே? காங்கிரஸ் தாங்கள் செய்த நன்மைகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்கலாமே? காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே தனித்து நின்று போட்டியிட முடியாது. அப்படி போட்டியிட்டால் காணாமல் போய் விடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ராஜீவ் காந்தி குறித்த சர்ச்சை பேச்சால் காங்கிரஸார் கடுப்பில் இருக்க சீமானின் மேற்கொண்ட தொடர் அவமதிப்பு பேச்சுகள் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :