வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (20:33 IST)

வாரிசுக்கு சீட்..! மதிமுக எம்பியை படுகொலை செய்தார் வைகோ..! தமிழிசை ஆவேசம்..!!

Vaiko
வைகோவின் வாரிசு அரசியலால் மதிமுக எம்பி கணேசமூர்த்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
 
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் எம்பி கணேசமூர்த்திக்கு வாய்ப்பு கொடுக்காததால், அவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தென் சென்னை தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தியின் இறப்பு தனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக தெரிவித்தார். வாரிசு அரசியல் ஜனநாயகத்தை படுகொலை செய்து விடும் என்று பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
 
வைகோவின் குடும்ப ஆசை, வாரிசு ஆசையால் நன்றாக பணியாற்றிக் கொண்டிருந்த மதிமுக எம்.பியை படுகொலை செய்திருக்கிறார் என்றும் அவர் ஆவேசம் தெரிவித்தார்.
 
கலைஞர் கருணாநிதி, ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது திமுகவிலிருந்து வைகோ வெளியேறியதாகவும், தற்போது அவரது மகனுக்கு தேர்தலில் சீட் வழங்கி, அனுபவம் வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினரை படுகொலை செய்திருக்கிறார் என்று வைகோவை தமிழிசை கடுமையாக சாடினார்.
 
இது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் எம்பி கணேசமூர்த்தி மரணத்திற்கு வைகோவும், ஸ்டாலினும் பதில் சொல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 

 
இதுதான் வாரிசு அரசியலின் அபாயகரம் என தெரிவித்த தமிழிசை, திமுகவில் உதயநிதிக்கு கிடைக்கிற அங்கீகாரம், சாதாரண தொண்டர்களுக்கு கிடைக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் திமுகவில் ஜனநாயகம் வரட்டும், வாரிசு அரசியல் ஒழியட்டும் என்று தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.