குற்றவாளி பொதுச் செயலாளரா? - சசிகலாவை எதிர்த்து 3 நாட்கள் உண்ணாவிரதம்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: செவ்வாய், 27 டிசம்பர் 2016 (06:23 IST)
சசிகலா ஆளுங்கட்சிக்கு, ஆட்சிக்குத் தலைமை ஏற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 நாள் உண்ணாவிரதம் நடைபெறும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் மீண்டும் ஒரு அசாதாரண நிலை உருவாவதைத் தடுக்கவும், நீதித்துறை மீதான நம்பிக்கையை உறுதிபடுத்தவும் ஜெயலலிதா-சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பை விரைந்துவழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு சட்ட பஞ்சாயத்து இயக்கம் அவசர மனு அனுப்பியது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் 2ஆம் இடத்தில் இருப்பவரையா தமிழக அரசில் முதலிடத்தில் வைக்கப்போகிறோம்..? என்று சசிகலாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 3 நாள் உண்ணாவிரதம் நடைபெறும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த உண்ணாவிரதம் 27-12-2016 (செவ்வாய்) காலை 8 மணி முதல் 29-12-2016 வரை, சென்னை தி.நகரில் உள்ள சட்ட பஞ்சாயத்து இயக்க அலுவலகத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஓமந்தூராரும், காமராஜரும், அண்ணாவும் அலங்கரித்த முதல்வர் பதவியில் விரைவில் பினாமியாக இருந்து, சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் மூலம் பல்லாயிரம் கோடிகள் சொத்து சேர்த்த சசிகலா அமர்வார் என்பதற்கான அறிகுறிகள் பலமாகத் தென்படுகின்றன.

ஆளுங்கட்சியின் முன்னணி நிர்வாகிகளே சசிகலா காலில் விழாத குறையாக கட்சிக்குத் தலைமை தாங்குங்கள் என்று கெஞ்சிவரும் காட்சிகளை தினந்தோறும் பார்த்து வருகிறோம். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் இரண்டாமிடத்தில் (Accused No:2 (A2) இருப்பவரையா தமிழக அரசில் முதலிடத்தில் வைக்கப்போகிறோம்..?

இன்னும் மூன்று நாட்களில் (டிசம்பர் 29) நடைபெறவுள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயலலிதா இருந்தபோதே குடும்பத்தோடு சேர்ந்து தமிழ்நாட்டைக் கொள்ளையடித்த கும்பல் நாளை ஆளுங்கட்சியை வழிநடத்தும் பொதுச்செயலாளராகி.. இன்னும் சில மாதங்களில் முதல்வரானால் தமிழ்நாடே சூறையாடப்படும் என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை..

சரி..பொதுமக்கள், சமூக ஆர்வலர்களாகிய நாம் இதற்கு என்ன செய்யலாம்..? இன்றைய சூழலில் பொதுமக்கள் தரப்பிலிருந்து சசிகலா அவர்கள் ஆளுங்கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமையேற்பதற்கு எதிர்ப்பு இல்லை என்ற மாயை கட்டமைக்கப்பட்டு வருகிறது.

ஆனால், உண்மை இதுவல்ல. கோடிக்கணக்கான மக்கள் மனதிற்குள்ளே குமுறிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. இப்படிக் குமுறிக்கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு, சமூக ஆர்வலர்களுக்கு, சமூக அமைப்புகளின், கட்சிகளின் உணர்வுகளை வெளிப்படுத்த, ஒருமுகப்படுத்தவே இந்த உண்ணாவிரதம்” என்று குறிப்பிட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :