1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 5 மே 2018 (13:07 IST)

சசிகலாவை சந்திக்க துடிக்கும் அதிமுக அமைச்சர்கள்? - அதிர்ச்சியில் தினகரன்

தினகரன் - திவாகரன் மோதல் சிறையில் உள்ள சசிகலாவிற்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எனவே, தினகரனுக்கு எதிராக பல கருத்துகளை திவாகரன் வெளிப்படையாக பேசி வருகிறார். 
 
தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை ஏற்க முடியாது. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை பெறாமல் அவர் தன்னிச்சையாக செயல்படுகிறார். சசிகலா சிறைக்கு சென்றதற்கே தினகரன்தான் காரணம். அவரின் முதல்வர் ஆசைதான் அனைத்து பிரச்சனைகளையும் கொண்டு வந்தது என்றெல்லாம் திவாகரன் கூறினார். 
 
இதுவரை தினகரன் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த திவாகர்ன மகன் ஜெயானந்தும், தினகரனுக்கு எதிராக பேச துவங்கியுள்ளார். இதுவரை நேரிடையான அரசியலில் இறங்காத திவாகரன், தற்போது அம்மா அணி என தனி அணியை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். ஆனால், திவாகரன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அதுபற்றி நான் கருத்து தெரிவிக்க விருப்பமில்லை என தினகரன் கூறியுள்ளார்.

 
தினகரன் - திவாகரன் தரப்புக்கு இடையேயான மோதல் சிறையில் உள்ள சசிகலாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அதிலும், திவாகரன் தனி அணியாக செயல்படுவது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவரை சந்திக்க தினகரன், திவாகரன் இருவருமே முயன்றனர். ஆனால், அவரோ யாரையும் சந்திக்க விருப்பம் தெரிவிக்க வில்லை.
 
இந்நிலையில், தினகரன் ஆதரவாளரும், கர்நாடக அதிமுக பிரமுகருமான வழக்கறிஞர் புகழேந்தி சமீபத்தில் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, அவரிம் கோபத்தை கொட்டித் தீர்த்தாராம் சசிகலா. எடப்பாடியாவது கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றுதான் என்னை ஒதுக்கி வைப்பதாக கூறினார். ஆனால், இவர்களோ பதவிக்காக அடித்துக்கொள்கிறார்கள். எடப்பாடி துரோகம் செய்தார் என பேசிய இவர்கள் தற்போது செய்வது என்ன?. நான் யாருக்கும் ஆதரவாக பேசமாட்டேன். யாரையும் சந்திக்க எனக்கு விருப்பமில்லை. என்னை சந்திக்க சில அதிமுக அமைச்சர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். குடும்பத்தை தூக்கி எறிந்துவிட்டு சென்றால் என்னை ஏற்க அனைவரும் தயாராக இருக்கின்றனர்” என மிரட்டும் தொனியில் பேசினாராம் சசிகலா.
 
இந்த தகவலை புகழேந்தி வழியாக அறிந்த தினகரன் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். உடனடியாக சசிகலாவை சந்தித்து பேசும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.