வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2017 (10:40 IST)

சசிகலாவை வைத்து நடத்தப்பட்ட விசேஷ பூஜை - நடந்தது என்ன?

பரோலில் வெளிவந்த சசிகலாவை வைத்து தி.நகர் வீட்டில் விசேஷ பூஜை ஒன்று நடத்தப்பட்டதாக தெரிகிறது.


 

 
உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக 5 நாட்கள் பரோலில் வெளிவந்தார் சசிகலா. தி.நகர் வீடு மற்றும் மருத்துவமனை தவிர வேறு எங்கும் செல்லக்கூடாது மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்கிற கட்டுப்பாடுகள் அவரின் கையை கட்டிப்போட்டன. 
 
எனவே, குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே அவர் அதிக நேரம் செலவு செய்தார். அப்போது,  திவாகரனுக்கும், தினகரனுக்கும் இடையே உள்ள பனிப்போர் குறித்தே அதிகம் விவாதிக்கப்பட்டதாம். 
 
அதோடு, ஜெ. உயிரோடு இருந்த போது நடந்த பூஜைகள் முதல் அவர் அடக்கம் செய்யப்பட்டது இறுதி சடங்கு வரை அனைத்தையும் செய்தவர் ஸ்ரீரங்கம் பட்டர் தேவாதி. அப்போலோவில் ஜெ. அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட ஜெ. நலம் பெற வேண்டி, மருத்துவமனையிலேயே இவரை வைத்து சசிகலா பூஜை செய்தார்.
 
அந்நிலையில், சசிகலா பரோலில் வெளிவந்து தங்கியிருந்த தி.நகர் வீட்டிற்கு சென்ற தேவாதி, அம்மாவிற்கு காரியம் செய்த நீங்கள், அதற்கு பிறகு நிறைய சடங்குகளை செய்ய வேண்டி இருந்தது. ஆனால், அதை முறைப்படி நீங்கள் செய்யவில்லை. அதனால்தான் உங்கள் குடும்பத்திற்கு பல சிக்கல் வந்து கொண்டிருக்கிறது. சில பூஜைகளை உடனே செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார். மேலும், அந்த பூஜை ஜெ. வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டிலோ அல்லது ஆற்றங்கரையிலோ செய்ய வேண்டும். ஆனால், அதற்கான சூழல் தற்போது இல்லை. எனவே, இந்த வீட்டிலோ செய்வோம் எனக் கூற, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டதாம். 
 
காவிரியிலிருந்து நீர் வரவழக்கப்பட்டு, சசிகலாவை மட்டும் வைத்து அந்த பூஜையை செய்த தேவாதி, அந்த தண்ணீரை போயஸ்கார்டன் மற்றும் ஜெ.வின் சமாதி ஆகிய இடத்தில் தெளிக்க வேண்டும் எனக்கூற அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக தெரிகிறது.
 
அரசியல் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாமல் போனாலும், ஜெ.விற்கான சடங்குகளை செய்ததில் சசிகலாவிற்கு சற்று திருப்தி ஏற்பட்டதாக அவரின் உறவினர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.