சசிகலாவை சந்திக்காத திவாகரன் - பின்னணி என்ன?


Murugan| Last Modified புதன், 11 அக்டோபர் 2017 (17:06 IST)
பரோலில் வெளிவந்த சசிகலா அவரது சகோதரர் திவாகரனை சந்தித்து பேசாததான் பின்னணி வெளியாகியுள்ளது.
 


 
உடல் நலக்குறைபாட்டில் அவதிப்படும் தனது கணவர் நடராஜனை சந்திப்பதற்காக 5 நாட்கள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா. அதன் பின் சென்னை தி.நகரில் உள்ள இளவரசி வீட்டில் அவர் தங்கினார். மேலும், நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மருத்துவமனைக்கு தினமும் சென்று நடராஜனை நலம் விசாரித்தார்.
 
சிறையிலிருந்து அவரை தினகரன் அழைத்து வந்தார். அவருடன் டாக்டர் வெங்கடேஷ் உடனிருந்தார். அதன் பின் இந்த 5 நாட்களும் தி.நகர் வீட்டில் திவாகரனின் மகன் ஜெயானந்த் உடனிருந்தார். ஆனால், சசிகலாவை திவாகரன் சென்று சந்திக்கவில்லை. 
 
சசிகலா பரோலில் வெளிவருவதற்கு முன் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றார் திவாகரன். ஆனால், சசிகலா சென்ற போது அவர் அங்கு இல்லை. 
 
அந்நிலையில், கட்சியில் ஜெயானந்த்திற்கு பதவி ஏதும் கொடுக்கப்படாததே அதற்கு காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது. எடப்பாடி அரசுக்கு எதிரான கருத்துகளை ஜெயனாந்த் தனது பேஸ்புக் மற்றும் தொலைக்காட்சி பேட்டி மூலமாக தொடர்ந்து தெரிவித்து வருகிறார். மேலும், தி. நகர் வீட்டில் பல அமைச்சர்களுடன் சசிகலா பேச விரும்பிய போது, அவர்தான் அதற்கான ஏற்பாடுகளை செய்தார் எனக் கூறப்படுகிறது. எனவே, கட்சியின் இளைஞர் பாசறையில் அவருக்கு பதவி வழங்கப்படும் என திவாகரன் எதிர்பார்த்தார் எனவும், ஆனால், சசிகலா மௌனம் கடைபிடித்ததால், அவர் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


 

 
ஆனால், தினகரன் மீது பல புகார்களை அதிமுக அமைச்சர்கள் சிலர் சசிகலாவிடம் தொலைப்பேசியில் கூறியதாகவும், தினகரனுக்கு எதிராக ஜெயனாந்தை களம் இறக்க சசிகலா முடிவெடுத்திருப்பதாகவும், சிறைக்கு சென்ற பின் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் எனவும் இன்று காலை செய்திகள் வெளியாகின.
 
மேலும், காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் திவாகரன் அவதிப்பட்டு வருவதாகவும், அதனால்தான் அவர் சசிகலாவை சந்திக்கவில்லை எனவும் அவரின் ஆதரவாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
ஜெயானந்திற்கு பதவி வழங்கப்படுமா என்பது சசிகலா சிறைக்கு மீண்டும் சென்ற பின்பே தெரியவரும்.


இதில் மேலும் படிக்கவும் :