"கோட்சேவின் பேரன்களுக்கு எதிராகப் பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கோட்சே தூக்கிலிடப்பட்ட இந்நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம் என்று அமைச்சர்வ் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
மாநில உரிமை மீட்புக்கான கழக இளைஞர் அணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முக்கியத்துவமிக்க மாநாட்டின் முழக்கத்தை, தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் சேர்க்கின்ற விதமாக, 188 இரு சக்கர வாகனங்களைக் கொண்ட #DMKriders-ன் வாகனப் பேரணியை கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை எதிரே இன்று தொடங்கி வைத்தோம்.
13 நாட்கள் - 234 தொகுதிகள் - 504 பிரச்சார மையங்கள் - 8,647 கிலோமீட்டர் என லட்சோப லட்ச இளைஞர்களை சந்திக்கவுள்ள இந்த இருசக்கர வாகனப் பேரணி, கழக வரலாற்றில் என்றைக்கும் நிலைத்திருக்கும்.
இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் கழக இளைஞர் படைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்! பாசிஸ்ட்டுகளை விரட்டி - மாநில உரிமைகள் மீட்க உறுதியேற்போம் என்று தெரிவித்துள்ளார்.