மக்கள் கருத்தை கேட்காமல் திட்டங்கள் செயல்படுத்த சட்டம்!? – வலுக்கும் எதிர்ப்புகள்
அரசு அனுமதியளித்த தனியார் நிறுவனங்களும், பொதுத்துறை நிறுவனங்களும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் மக்கள் புகார் அளிக்க முடியாதபடிக்கு புதிய சட்டத்தை மத்திய அரசு இயற்ற முயற்சிப்பதாக எதிர்ப்புகள் எழ தொடங்கியுள்ளன.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் மீத்தேன், கெயில் குழாய் அமைப்பு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல திட்டங்களில் சுற்றுசூழலுக்கு ஏற்படும் அபாயம் குறித்து மக்கள் போராடி வருகின்றனர். சமீபத்தில் வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு உட்பட்ட நிலப்பகுதிகளை தனியார் மருந்து நிறுவனத்திற்கு அளிப்பதற்கு எதிராகவும் மக்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் அரசு அனுமதி பெற்று ஆலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகள் மீது மக்கள் வழக்கு தொடுக்க முடியாதபடி சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு-2020 (Environment Impact Assesment – 2020) என்ற மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வரைவு அறிக்கையை தமிழில் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு விசிக எம்.பி ரவிக்குமார் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் இந்த சட்டம் மக்களுக்கு எதிரானது என சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். அணை கட்டும் திட்டங்கள், எரிவாயு குழாய் அமைப்பது போன்ற பணிகளில் மக்களின் கருத்தை கேட்க 30 நாட்கள் அவகாசம் என இருந்ததை 20 நாட்களாக குறைத்துள்ளதாகவும், வளர்ச்சி திட்டங்களுக்காக மரத்தை வெட்டுதல், நிலங்களை பெறுதலுக்கு மக்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்துகள் தேவையில்லை என்றும் அந்த சட்ட வரைவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.