ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (23:15 IST)

தினகரன் வெற்றியால் தமிழக மக்கள் அதிர்ச்சி: ஓபிஎஸ் அறிக்கை

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றது அதிமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏற்கனவே மைனாரிட்டி அரசு நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், ஆளும் கட்சி என்ற அதிகாரம், இரட்டை இலை, ஈபிஎஸ்-ஓபிஎஸ் இணைப்பு, வலுவான வேட்பாளர் ஆகியவை இருந்தும் தினகரன் பெற்ற வாக்குகளில் இருந்து பாதி வாக்குகளைத்தான் அதிமுக பெற்றுள்ளது.

இந்த நிலையில் தினகரனின் வெற்றி குறித்து துணண முதல்வர் ஓபிஎஸ் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அதிமுகவையும், இரட்டை இலையையும் நேரடியாக மோதி எந்த ஜென்மத்திலும் தோற்கடிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட திமுகவும், அம்மா அவர்களுக்கு பச்சை துரோகம் இழைத்த தினகரனும் ரகசிய கூட்டு சேர்ந்தது, தமிழக மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது

திருமங்கலத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து திருமங்கலம் பார்முலா என்று புதிய சொல்லை தீய சக்தி திமுக உருவாக்கியது. அதே வழியில் இப்பொழுது ஆர்.கே நகரில் நூதன முறையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தினகரன் பார்முலா என்னும் தீய சொல்லை உருவாக்கியுள்ளனர்

திமுக செயல் தலைவர் திரு ஸ்டாலினும்,புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வாழும்போதும், வாழ்விற்கு பின்னும் அம்மா அவர்களுக்கும் கழகத்திற்கும் துரோகம் செய்துகொண்டிருக்கும் தினகரனும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ரகசிய உடன்பாட்டின் வெளிப்பாடே ஆர்.கே நகர் தேர்தல் முடிவு

ஆர்.கே நகரில் ஒவ்வொரு நாளும் பணத்தை வாரி இறைத்த தினகரன் குழுவினர், பிரச்சாரத்தின் கடைசி நாளில் 20ரூ தாள்களை வீடுவீடாக வாக்காளர்களுக்கு குடுத்து, வெற்றி பெற்றதும் அதற்கு ஈடாக 10,000 ரூ தரப்படும் என்று மக்களை நம்பவைத்து ஏமாற்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள்