திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 11 அக்டோபர் 2017 (08:55 IST)

இந்த ஆட்சியை அமைத்தது சசிகலாவா?: பதில் சொல்லாமல் சென்ற ஓபிஎஸ்!

இந்த ஆட்சியை அமைத்தது சசிகலாவா?: பதில் சொல்லாமல் சென்ற ஓபிஎஸ்!

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் தர்ம யுத்தம் என்ற பெயரில் சசிகலா அணிக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். அதன் பின்னர் சசிகலா எம்எல்ஏக்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக உதவினார்.


 
 
ஆனால் சசிகலா சிறைக்கு சென்றதும் கட்சியில், காட்சிகள் மாறின. சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டனர், ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி இணைந்து ஆட்சியை நடத்தி வருகிறது. ஓபிஎஸ் துணை முதல்வரானார்.
 
இந்நிலையில் ஐந்து நாட்கள் சசிகலா சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த ஆட்சி அமைய சசிகலாதான் காரணம் என தனது சசிகலா பாசத்தை வெளிப்படுத்தினார்.
 
இதனையடுத்து செல்லூர் ராஜூ தினகரனின் ஸ்லீப்பர் செல் என அழைக்கப்பட்டார். உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவித்த செல்லூர் ராஜூ, தான் எப்போதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடக்கும் ஆட்சிக்கு ஆதரவு எனவும், தான் ஸ்லீப்பர் செல் இல்லை எனவும் கூறினார்.
 
இந்நிலையில் பல்வேறு அரசுப் பணிகள் காரணமாக தேனி சென்றிருந்த துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை திரும்புவதற்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், இந்த ஆட்சி அமைய காரணமாக இருந்தது சசிகலாதான் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பினர். ஆனால் ஓபிஎஸ் அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.