அதிமுகவுக்கு சசிக்கலாவை அழைத்த ஓபிஎஸ்!? – அதிர்ச்சியில் எடப்பாடி க்ரூப்?
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என உத்தரவிடப்பட்ட நிலையில் இணைந்து செயல்படலாம் என ஓ.பன்னீர்செல்வம் சசிகலா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களும் அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 11 அன்று நடந்த பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ல் இருந்த நடைமுறையே தொடரும் என்று உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்திய ஓ.பன்னீர்செல்வம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படலாம் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து பேசினார். அப்போது அவர் “ம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவற்றை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.
நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும், இதற்கு முன் ஏற்பட்ட கசப்புகளை மனதில் இருந்து தூக்கி எறிந்து, கழக ஒற்றுமையை மனதில் கொள்ள வேண்டும். 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது முழு ஒத்துழைப்பு வழங்கினோம், அந்தநிலை மீண்டும் தொடர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுகவை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என முன்னதாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிக்கலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மேலும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.