வாங்காத பொருட்களை வாங்கியதாக குறுஞ்செய்தி: ஓபிஎஸ் புகார்
ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களை வாங்கியதாக குறுஞ்செய்தி அனுப்படுவது குறித்து ஓபிஎஸ் புகார்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகவும், அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 09) வெளியிட்ட அறிக்கை, அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதில் நியாய விலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனம் ஆகியவை முக்கியப் பங்காற்றி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. உணவுப் பாதுகாப்பின் அங்கங்களாக திகழும் இவற்றில் முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுகின்றன.
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வழங்கியவுடன் அவர்களுடைய கைபேசிகளுக்கு என்னென்ன பொருட்கள் வாங்கப்பட்டன என்ற தகவல் குறுஞ்செய்தியாக அனுப்பப்படுகின்றன. ஆனால், வாங்கப்படாத பொருட்களும் வாங்கப்பட்டதாக குறுஞ்செய்திகள் வருவதாக குடும்ப அட்டைதாரர்கள் தெரிவிப்பதாக செய்திகள் வருகின்றன.
எனவே, தமிநாடு முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்குகளிலும், நியாய விலை கடைகளிலும் நடைபெறும் முறைகேட்டினை உடனடியாகத் தடுத்து நிறுத்தி, சரியான எடையுள்ள பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.