செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 பிப்ரவரி 2022 (10:25 IST)

பள்ளி திறந்தும் வராத மாணவர்கள்! வேலைக்கு செல்கின்றனரா? – அதிகாரிகள் சந்தேகம்!

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பின்னும் பல பகுதிகளில் மாணவர்கள் வருகை குறைந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதலாக பள்ளிகள் சரிவர செயல்பட முடியாத நிலை உள்ளது. சுழற்சி முறை வகுப்புகள், ஆன்லைன் வகுப்புகள் என நடந்து வந்த நிலையில் தற்போது பள்ளிகள் முழுவதுமாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் வருகை பல பகுதிகளில் குறைவாகவே இருந்து வருவதாக கூறப்படுகிறது. மாணவர்கள் தொடர்ந்து விடுப்பு எடுத்தால் அதுகுறித்து கண்காணிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் பல பள்ளிகளில் 30 சதவீத மாணவர்கள் தொடர் விடுமுறையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மேற்பார்வையிட மாணவர்களின் வீட்டிற்கு சென்றால் அங்கு மாணவர்கள் அதிகபட்சம் இருப்பதில்லை என்றும், இதனால் மாணவர்கள் வேலைக்கு செல்கின்றனரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. பள்ளி கல்வி இடைநிற்றலை தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.