புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2019 (09:04 IST)

போராட்டம் வாபஸ் ஏன்? மருத்துவர்கள் சங்க பிரதிநிதி விளக்கம்

கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்றுடன் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன் என்பவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
தமிழகத்தில் ஏற்கனவே அவசர சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும் ஒரு சில சிகிச்சைகள் நாள்பட அவசர சிகிச்சைகளாக மாறும் அபாயம் இருப்பதாலும், புயல் காரணமாக காய்ச்சல் பரவி வரும் சூழல் காரணமாகவும், முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும், மீண்டும் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலும், எங்களுடைய இயக்குனர் கொடுத்த வேண்டுகோள் அடிப்படையிலும், ஜனநாயக சக்திகளும் நோயாளிகளும் கொடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும் எங்களுக்கு வேறு வழியே இல்லாமல் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நாங்கள் வாபஸ் பெறுகிறோம் 
 
ஆனால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாகவும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதில் தயவு செய்து தங்களுடைய கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். விரைவில் கூட இருக்கும் தமிழக அமைச்சரவையில் எங்களது கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று நம்புகிறோம் என்றும், எங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவு செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் லட்சுமி நரசிம்மன் மேலும் தெரிவித்தார்.
 
அதுமட்டுமின்றி போராட்டம் வாபஸ் பெற்ற பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், போராட்டம் செய்த மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
இன்றுக்குள் போராட்டம் செய்த மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்ததை அடுத்து தற்போது போராட்டம் வாபஸ் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது