ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 17 ஜூன் 2024 (16:58 IST)

சசிகலாவுக்கு ரீ என்ட்ரி இல்லை.! அடித்து சொல்லும் ஜெயக்குமார்..!!

ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதால் விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர்  ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவுக்கு சசிகலா ரீ என்ட்ரி ஆக முடியாது என்றும் அவர் பதில் அளித்துள்ளார். 
 
சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  2015 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றார். ஈரோடு இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலையை பார்த்துவிட்டோம் என்றும் இந்த விக்கிரவாண்டி தேர்தலில் திமுக குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சிக்கும் என்றும் அவர் குற்றம் சாட்டினார். 
 
விக்கிரவாண்டி தொகுதியில் எல்லா அமைச்சர்களும் முகாமிட்டுள்ளதாக தெரிவித்த ஜெயக்குமார், இதுவரை அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த தேர்தல்களில் என்றாவது வன்முறை நடந்துள்ளதா? என்று கேள்வி எழுப்பினார். விக்கிரவாண்டியில்தான் முழு அரசு இயந்திரமும் செயல்படும் என்றும் ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்பதால் விக்கிரவாண்டியில் போட்டியிடவில்லை என்றும் அவர் பதில் அளித்தார். 
 
பாஜக தனித்து போட்டியிட்டு வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தால் அது சரியான வாதம் என குறிப்பிட்ட அவர், 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு வாக்கு சசவீதம் அதிகரித்ததாக அண்ணாமலை கூறுகிறார் என்றும் எத்தனை தேர்தல் வந்தாலும் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரிக்காது என்றும் தெரிவித்தார். 

 
தமிழக பாஜகவுக்கு அண்ணாமலையை நீக்கிவிட்டு யாரை போட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக கூறினார். தமிழிசையை பொதுவெளியில் அமித்ஷா அவமானப்படுத்தியிருக்கக் கூடாது என்றும் சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவருக்கு ரீ என்ட்ரியும் இல்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.