ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 7 ஜூன் 2019 (18:04 IST)

நீட் எளிதானதுதான்: தற்கொலை செய்துகொள்ள வேண்டாம் – வெற்றிபெற்ற மாணவர் பேட்டி

”நீட் தேர்வில் வெற்றி பெறுவது எளிதுதான். 11 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை உன்னிப்பாக கவனித்து படித்தாலே போதும். தயவுசெய்து மாணவர்கள் யாரும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம்” என நீட் தேர்வில் தேசிய அளவில் 5ம் இடம்பிடித்த மாணவர் கார்வண்ணபிரபு தெரிவித்துள்ளார்.

கரூர் கௌரிபுரம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் கண்ணன். இவரது மனைவி கௌசல்யாவும் மருத்துவர்தான். இவர்களுக்கு ஒரு பெண்ணும், பையனும் உள்ளனர். பெண் கபிலா சென்னை மருத்துவ கல்லூரியில் 4ஆம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். மகன் கார்வண்ணபிரபு கால்களில் குறைபாடு உள்ளவர். சிபிஎஸ்சி பள்ளியில் படித்தவர் தற்போது நீட் தேர்வு எழுதி மாற்றுதிறனாளிகள் பிரிவில் தேசிய அளவில் 5வது இடத்தை பெற்றுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் “எனக்கு கால்களில் குறைபாடு உள்ளபோதிலும், என் பெற்றோரோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ என்னை மாற்றுதிறனாளி போல ஒருநாளும் நடத்தியது இல்லை. அதனால்தான் நான் நம்பிக்கையுடன் படித்து நிறைய மதிப்பெண்கள் பெற முடிந்தது. மாற்றுதிறனாளியாகிய நானே நம்பிக்கை இழக்காமல் நீட் தேர்வில் வெற்றிபெற்றுள்ளேன். நீட் ஒரு எளிதான தேர்வுதான். மாணவர்கள் இதை கண்டு பயப்பட தேவையில்லை. 11 மற்றும் 12ம் வகுப்புகளில் உள்ள பாடங்களை உன்னிப்பாக படித்தாலே எளிதில் தேர்ச்சி பெற்றுவிடலாம். ஒருவேளை தேர்ச்சி பெறா விட்டாலும் 3 வாய்ப்புகள் தரப்படுகிறது. அதை பயன்படுத்தி தேர்ச்சி பெறலாம். அதனால் மாணவர்கள் யாரும் தோல்வியுற்றதை எண்ணி தற்கொலை செய்து கொள்ள வேண்டாம்” என அவர் தெரிவித்தார்.