திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 டிசம்பர் 2021 (12:36 IST)

போலீஸ் விசாரணைக்கு சென்ற மாணவர் மரணம்! – ட்ரெண்டாகும் #JusticeForManikandan

ராமநாதபுரத்தில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழியேந்தல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன். நேற்று மாலை கீழ்தூவல் சாலையில் போக்குவரத்து சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டனை நிறுத்த முயன்றபோது அவர் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை விரட்டி பிடித்த போலீஸார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

பின்னர் அவரது வீட்டாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் மணிகண்டனை பின்னர் வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் மணிகண்டனுக்கு உடல்நல கோளாறு ஏற்பட்டுள்ளது. உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். அவர்கள் வந்து சோதித்தபோது மணிகண்டன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பியிடம் மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டனின் உடல் உடற்கூராய்வுக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளது. போலீஸார் தாக்கியதால்தான் மணிகண்டன் இறந்தார் என குற்றம்சாட்டிய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து சாலையில் போராட்டம் செய்துள்ளனர். மணிகண்டன் எதனால் இறந்தார் என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரிய வரும் என்ற நிலையில் சமூக வலைதளங்களில் #JusticeForManikandan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.