அப்போ 14 நம்பர்; இப்போ மோடி பேசறார்! – விதவிதமாக களமிறங்கும் மோசடி கும்பல்!
நாடு முழுவதும் கொரோனா பாதித்துள்ள நிலையில் நிவாரண உதவிகளுக்காக மோடி உதவி செய்ய கேட்டதாக போன் கால் வழியாக மோசடி கும்பல் ஒன்று ஏமாற்று வேலைகளை செய்ய தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதலமைச்சர் மற்றும் பிரதமர் நிவாரண கணக்குகளுக்கு நிதியளிக்க கோரி விளம்பரங்கள் செய்யப்பட்டன. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பவர் காய்கறி வியாபாரம் செய்தபடி படங்களிலும் நடித்து வருகிறார். அவருக்கு சமீபத்தில் ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர்கள் தாங்கள் தலைமை அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்க பிரதமர் மோடி போன் கால் வழியாக பேச சொன்னதாகவும் கூறியுள்ளார்கள்.
மேலும் சுரேஷின் வங்கி கணக்கு எண், ஏடிஎம் பாஸ்வேர்டு போன்றவற்றை கேட்டுள்ளனர். இதனால் உஷாரான சுரேஷ் “அருகில் மோடி இருக்கிறாரா? நான் அவருடன் பேச வேண்டும்” என கேட்க, பேசிய நபரும் அருகில்தான் இருக்கிறார் தருகிறேன் என கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டாராம். இதுகுறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ள சுரேஷ் இதுபோன்று போன்கள் மூலம் மோடி பேசுகிறார் என பணம் கேட்கும் மோசடி கும்பலை நம்ப வேண்டாம் என கூறியுள்ளார்.
சமீபத்தில் போன் செய்து ஏடிஎம் மேல் உள்ள 14 டிஜிட் நம்பரை கேட்கும் மோசடி கும்பலின் ஆடியோ இணையத்தில் வைரலான நிலையில், தற்போது இந்த செய்தியும் வைரலாகி வருகிறது.