வங்கிகளை மிரட்ட விட்டு வேடிக்கை பாக்காதீங்க! – மு.க.ஸ்டாலின் காட்டம்!
ரிசர்வ் வங்கி தவணை தொகை வசூலிக்க கால அவகாசம் அளித்துள்ள நிலையிலும் வங்கிகள் அத்துமீறி நடந்து கொள்வது குறித்து மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மானூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜாமணி வங்கி தவணை செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ”விவசாயிகளுக்கு இடி மேல் பேரிடி போல வங்கிகளின் கடன் சுமை உள்ளது. கொரோனா ஊரடங்கால் பொருளாதார ரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வங்கி கடன் தவணைகளை வசூலிக்க கால அவகாசம் வழங்கியுள்ளதாய் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசு அறிவித்துள்ளன.
ஆனால் அந்த நடைமுறைகளை வங்கிகள் சரியாக பின்பற்றுகின்றனவா என்பது கண்காணிக்கப்பட வேண்டும். மானூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி வங்கி கடனால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவசாயியை கடன் தொகை செலுத்த சொல்லி மிரட்டிய வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அறிவிப்பு ஒன்றும்’ ‘அணுகுமுறை வேறுமாக’ அராஜகத்தை அரங்கேற்றும் வங்கிகளின் எதேச்சதிகார நடவடிக்கைகளை, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தலையிட்டுத் திருத்தாமல் வேடிக்கை பார்ப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.” என்று தெரிவித்துள்ளார்.