புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2019 (18:55 IST)

சென்னையில் உலக தரத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதி!? – தமிழக அரசின் அட்டகாசமான அறிவிப்பு

விடுதிகளில் தங்கி பணிபுரியும் பெண்களுக்காக மிகப்பெரிய பரப்பளவில் உலக தரத்தில் விடுதி ஒன்று கட்டப்படும் என அதிமுக அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

நாள்தோறும் பணி நிமித்தம் சென்னைக்கு வரும் மக்கள் ஏராளம். அதிலும் பெண்கள் எண்ணிக்கை மிக அதிகம். உள்ளூர் பெண்களை தாண்டி சென்னைக்கு அருகிலிருக்கும் ஊர் பெண்களும் நாள்தோறும் பஸ், ரயில் மூலமாக வேலைக்கு வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் சென்னைகளில் உள்ள விடுதிகளில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். பணி புரியும் பெண்கள் மட்டுமல்லாமல் சென்னைக்கு படிக்க வரும் பெண்களுக்கும் தனியார் விடுதிகளே தங்குவதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

விடுதிகளும் அவரவர் பொருளாதார வசதிகேற்பவே கிடைக்கிறது. குறைந்த சம்பளமே வாங்கு ஒரு பெண் தனது சம்பளம் முழுவதையும் விடுதிக்கு கொடுத்துவிட முடியாதாகையால் விலை குறைவான விடுதிகளை நோக்கி செல்கின்றனர். அடிப்படை வசதிகளுக்கே தட்டுபாடாய் உள்ள விடுதிகளில் சென்று தங்குகின்றனர்.

தமிழக அரசின் சார்பில் ஆங்காங்கே விடுதிகள் இயங்கி வந்தாலும் குறிப்பிட்ட அளவு பெண்கள் மட்டுமே அங்கே தங்க கூடிய சூழல் இருஎது வருகிறது. இந்நிலையில் வடபழனியில் உள்ள சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பெண்கள் விடுதியை பார்வையிட்டார் அமைச்சர் சரோஜா.

பிறகு பேசிய அவர் “பெண்கள் தங்குவதற்கு உலக தரத்திலான விடுதிகளை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். இதனால் 28 கோடி மதிப்பில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் நல்ல வசதிகளுடன் கூடிய பெண்கள் விடுதி விரைவில் அமைக்கப்பட இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

முதற்கட்டமாக தமிழகத்தின் சென்னை உட்பட முக்கியமான நான்கு மாநகரங்களில் இந்த விடுதிகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.