1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2024 (16:36 IST)

பாலின் அளவு குறைவு.. விலை அதிகம்.. ஆவின் நிறுவனம் மீது அன்புமணி குற்றச்சாட்டு..!

aavin
பாலின் அளவு குறைவு, ஆனால் விலை அதிகம் என ஆவின் நிறுவனம் மீது  பா.ம.க. நிறுவனர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் புதிய பச்சை உறை  பால் வரும் 18-ந் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும் என்று  ஆவின் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அளவு குறைப்பு, விலை அதிகரிப்பு ஆகிய இரண்டை தவிர புதிய பாலில் எந்த புதுமையும் இல்லை. 
 
தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22க்கு விற்கப்படுகிறது. அதில் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்து, 9 சதவீதம் கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் உள்ளன. ஆனால், கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில்,  கிரீன் மேஜிக் பிளஸ் 900 மி.லி. ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. 
 
கிரீன் மேஜிக் பால்  500 மி.லி  ரூ.22-க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25-க்கு விற்கப்படும். அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். ஆவின் கிரீன் மேஜிக் பாலுடன்  பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக  சேர்ப்பதற்காக ரூ.11 அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும்.
 
எனவே அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44  என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும்.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    
 
Edited by Mahendran