இந்தி திணிப்பிற்கு எதிராக போராட வேண்டிய நிலை உருவாகும் - கே.எஸ்.அழகிரி!
இந்தி பேசாத மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இந்தி திணிப்பிற்கு எதிராக போராட வேண்டிய நிலை உருவாகும் என கே.எஸ்.அழகிரி பேட்டி.
நாடு முழுவதும் மக்கள் இந்தி பேச, படிக்க வேண்டும் என்ற நிலைபாட்டில் பாஜக அரசு தீவிரமாக உள்ளது. எனினும் பல மாநிலங்களில் இந்தி திணிப்பால் தாய் மொழி அழியும் அபாயம் உள்ளதாக பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழி நெகிழ்வடையாத நிலையில் அது பரவாது. அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.
அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இந்தி பேசாத மக்களின் உணர்வுகளை புண்படுத்தி இந்தியை திணிப்பதில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தீவிரம் காட்டுகிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் இந்தி பற்றிய உரை அரசியலமைப்பு மற்றும் ஆட்சி மொழிகள் சட்டத்திற்கு விரோதமானது. பாஜகவின் இந்தி திணிப்பிற்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய நிலை உருவாகும் எனவும் கூறினார்.