கலைஞர் நூற்றாண்டு விழா! ஏராளமான நட்சத்திரங்களுக்கு அழைப்பு! – பிரம்மாண்ட மேடை தயார்!
தமிழ் திரை உலகில் தனது வசீகரமான வசனத்தால் மக்களை சிந்திக்க வைத்த அற்புதமான வசனகர்த்தா டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் அனைத்து திரை உலக சங்கங்களும் இணைந்து வரும் 6.1.2024 சனிக்கிழமையன்று சென்னையில் கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கோலாகலமாக கொண்டாட உள்ளது.
இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், கலைஞானி கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தமிழ்திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தெலுங்கு பட உலகிலிருந்து சிரஞ்சீவி, வெங்கடேஷ் , மலையாள பட உலகிலிருந்து மம்முட்டி, மோகன்லால், கன்னட பட உலகிலிருந்து சிவராஜ்குமார் மற்றும் இந்தி திரை உலகிலிருந்து முன்னணி நட்சத்திரங்கள் என அனைத்து மொழி நட்சத்திரங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
ஆறுமணி நேரம் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கலைஞர் வசனம் தீட்டிய, பாடல்கள் எழுதிய படங்களில் இருந்து பல புதுமையான காட்சி அமைப்புகள் , கலைஞரை பற்றி இதுவரை வெளிவராத தகவல்கள் அடங்கிய ஆவண படங்கள் என பல தரப்பட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் மேடையில் மக்களுக்கு காட்டப்பட உள்ளன.
இந்த விழாவிற்காக டெல்லியில் இருந்து ட்ரோன்கள் வரவழைக்கப்பட்டு பிரமாண்டமான ஷோக்கள் பரவசப்படுத்த உள்ளன. இந்த விழவிற்காக 50க்கும் மேற்பட்ட முன்னனி இயக்குனர்கள், 20 க்கும் மேற்பட்ட நடன மாஸ்டர்கள் ரிகர்சல் பார்த்து வருகின்றனர்.
இந்த பிரம்மாண்டமான விழாவிற்காக மிகப்பெரிய மேடை' 20 ஆயிரம்பேர் அமர்ந்து பார்க்க நாற்காலிகள், 50க்கும் மேற்பட்ட டிஜிட்டல் திரைகள் என வேலைகள் மும்முரமாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மேற்பார்வையில் , பெப்சி பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.