செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 டிசம்பர் 2017 (18:10 IST)

ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம்: விசாரணை ஆணையத்திடம் தீபா கோரிக்கை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சசிகலா குடும்பத்தின் மீது சந்தேகம் இருப்பதாகவும், ஜெயலலிதா போயஸ் கார்டனில் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவரது அண்ணன் மகள் தீபா விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார்.
 
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவரை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் மட்டுமே அவரோடு இருந்தனர். அவர் சிகிச்சை பெற்ற எந்த புகைப்படமும் கடைசி வரை வெளியிடப்படவில்லை.
 
இதனால் அனைவருக்கும் அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த விசாரணை ஆணையும் ஜெயலலிதா மரணம் குறித்து புகார் அளித்த அனைவரையும் விசாரித்து வருகிறது.
 
இதனடிப்படையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு இன்று விசாரணைக்கு ஆஜராகினார். இந்த விசாரணை சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார் தீபா.
 
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தீபா, ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டில் தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தங்களுக்கு இருப்பதாகவும், ஜெயலலித வீட்டில் இருந்த ஒரு நபர் தங்களுக்கு பல்வேறு முக்கிய தகவல்களை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
 
போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்த ராஜம்மாள் உள்ளிட்ட அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும். குறிப்பாக சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் விசாரிக்க வேண்டும் என தீபா கோரிக்கை விடுத்துள்ளார்.