1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 12 டிசம்பர் 2022 (16:39 IST)

தொங்கல் மேயர் பிரியா… வருத்தத்தை நக்கலாய் பதிவு செய்த ஜெயகுமார்!

சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது என ஜெயகுமார் பேட்டி.


மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்படியாக முதல்வர் பயணம் செய்த காரில் சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா ஆபத்தான முறையில் வெளியே தொங்கியபடி பயணம் செய்தார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி கிண்டலுக்கு உள்ளானது.

இந்நிலையில் முதல்வரின் காரில் சென்னை மேயர் ப்ரியா தொங்கிக் கொண்டு சென்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார். மேயர் ப்ரியா தொங்கிக் கொண்டு வந்தது முதல்வரின் கார் அல்ல. பாதுகாப்புக்கு வந்த கார். ஒரு அசாதாரண சூழலில் உடனடியா அவ்விடம் நோக்கி விரைய மேயர் ப்ரியா அவ்வாறு செய்துள்ளார். ஒரு பெண்மணி இவ்வளவு விரைவாக ஆணுக்கு நிகராக இப்படி துணிச்சலோடு செய்கின்ற பணிகளை பாராட்டலாமே தவிர விமர்சிப்பது தேவையற்ற ஒன்று என கூறியுள்ளார்.

இருப்பினும் இது குறித்து அதிமுக ஜெயகுமார் கூறியுள்ளதாவது, சென்னை பெண் மேயர் காரில் தொங்கியபடி சென்றது வருத்தம் அளிக்கிறது. முதல்வர் கலந்து கொள்ளும் திறப்பு விழாவில், ரிப்பன் வெட்ட மேயர் கத்திரிக்கோல் தட்டை ஏந்தி நிற்கிறார். முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் தொங்கிக்கொண்டு செல்லும் தொங்கல் மேயராக உள்ளார்.

மேயரின் பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இரும்புப் பெண்மணி என்று அழைக்கப்பட்ட அம்மா ஆண்ட இந்த மண்ணில் இப்படி ஒரு இழுக்கு ஏற்பட்டுள்ளது என வருத்தம் தெரிவித்துள்ளார்.